போதை என்ற பாதையில் போனால் சுகம் தரும் பயணம் நன்றாக இருப்பினும், மனிதன் பாதியிலேயே எமலோகம் போவது நிச்சயமே. யாதொன்றும் அறியாமல் என் வாழ்க்கைப் பயணமே தன் கணவன் என்று தன் இறுதி மூச்சு உள்ளவரை வாழும் மனைவிக்கு, தன் கணவனின் நண்பர்களால் நேர்ந்த கொலை எனும் துக்க சம்பவத்தை நம் ஜெம் தொலைக்காட்சி மூலம் பார்க்கலாம்.
கடையநல்லூர் அருகே உள்ள வலசை பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் மகேந்திரன் என்பவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில், கோழிக்கு கோழி முதல் முட்டைக்கு முட்டை வரை இவை இரண்டும் வளரும் ஒரே இடமான கோழிப்பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி அன்று தான் வேலை பார்க்கும் கோழிப்பண்ணையின் உரிமையாளரிடம் பணம் வாங்கிக்கொண்டு, தனது மனைவி புவனேஸ்வரியிடம் தான் வெளியில் சென்று வருவதாகக் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் தினந்தோறும் தன் கணவனின் வருகையை எண்ணி வாசலில் காத்திருக்கும் அவரது மனைவி சந்தேகமடைந்து, கோவலனைக் காப்பாற்ற கண்ணகி எப்படி பாண்டிய மன்னனிடம் வாதாடினாலோ, அப்படி புவனேஸ்வரி தன் கணவனை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கதறியபடி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்திருக்கிறார்.
ஆட்டைக் காணோம், மாட்டைத் காணோம், ஏன் கிணற்றைக் கூட காணோம் என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தால் கண்டுபிடித்துத் தரும் இக்காலத்தில், சேர்ந்தமரம் காவல்துறையினர் எந்தக் கடுப்பில் இருந்தார்களோ, புகார் மனுவைப் பெறாமல் நன்றாகத் தேடிப் பார்த்துவிட்டு வாருங்கள் என்று திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
அதன்பின்னர் வீடு திரும்பிய மனைவி, தன் கணவனைத் தேடாத இடமெல்லாம் தேடி அலைந்தார். இருப்பினும் எல்லா இடங்களிலும் தேடியும், உறவினர்களிடம் விசாரித்தும் எந்தவிதத் தகவலும் கிடைக்காத நிலையில், புவனேஸ்வரியின் செல்போன் எண்ணிற்கு ஒரு நாடகமாடும் வகையிலும், அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும் ஒரு செல்போன் அழைப்பு வருகிறது.
அந்த அழைப்பில் பேசிய நபர், “உங்கள் கணவரைத் தேட வேண்டாம்; நாங்கள் அனைவரும் ஊட்டிக்குச் சுற்றுலா வந்திருக்கிறோம்” எனக் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். இதனை நம்பி மனைவி புவனேஸ்வரியும் தன் கணவர் திரும்புவார் என்று காத்திருந்துள்ளார்.
அதன்பின்னர் இரண்டு நாட்கள் ஆகியும் கணவர் வீடு திரும்பாத நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் துடிதுடித்துப் போன மனைவி, மீண்டும் உறவினர்களிடம் கணவரைப் பற்றி விசாரித்துள்ளார்.
இதிலும் எந்தத் தகவலும் கிடைக்காததால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.இங்குதான் மகேந்திரனின் கொலை சம்பவம் குறித்த காவல்துறையின் விசாரணைத் தொடக்கம் ஆரம்பமாகிறது. கடையநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள குளத்தில் கேட்பாரற்றுக் கிடந்த இருசக்கர வாகனம்: கடையநல்லூர் தீயணைப்புத்துறை அலுவலகம் அருகே உள்ள தெப்பக்குளத்தில் இருசக்கர வாகனம் கேட்பாரற்றுக் கிடந்த நிலையில், அந்த வாகனத்தைக் காவல்துறையினர் கைப்பற்றினர்.
அந்த வாகனத்தின் உரிமையாளர் யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்த நிலையில், அது வலசை பகுதியைச் சேர்ந்த ஒருவரின் இருசக்கர வாகனம் என்பதும், அந்த வாகனத்தை அவரிடம் வெளியில் சென்று வருவதாகக் கூறி மகேந்திரன் வாங்கிச் சென்றதும் தெரியவந்தது.
அதன்பின்னர் ‘சுட்டதடா கைவிட்டதடா’ எனச் சேர்ந்தமரம் காவல்துறையினர், மகேந்திரன் காணாமல் போன வழக்கில் காவல் நிலையத்திலிருந்து விரட்டிவிட்ட அவரது மனைவி புவனேஸ்வரியிடம் புகார் மனுவைப் பெற்றனர். அதன் பின்னரே காவல்துறையினர் 12 நாட்களுக்குப் பிறகு விசாரணையைத் தொடங்கினர்.
மகேந்திரனுக்குப் பழக்கமான நண்பர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில், மேலக்கடையநல்லூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஐ.டி.ஐ-யில் படித்து வரும் 17 வயதுச் சிறார் ஒருவர் என்பது தெரியவந்தது. இவருடன் ஐ.டி.ஐ-யில் படித்து வரும் மேலும் இரண்டு சிறார்கள் என மூன்று சிறார்களைச் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மூன்று சிறார்கள் மற்றும் இதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஐ.டி.ஐ படித்த கிருஷ்ணன் ஆகியோரும், கொலை செய்யப்பட்ட மகேந்திரனும் நண்பர்கள் என்பதும், இவர்கள் நான்கு பேரும் அடிக்கடி ஒன்றாகச் சேர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சுற்றித் திரிவதும், மது உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதும் வழக்கமாகக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட மகேந்திரன் கடந்த 4-ஆம் தேதி அன்று தான் வேலை பார்க்கும் ஓனரிடம் பணம் வாங்கிக்கொண்டு, தனது நண்பர்களான மூன்று சிறார்கள் மற்றும் கிருஷ்ணனுடன் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வந்துள்ளார். கடையநல்லூர் திரும்பிய இவர்கள், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான பாழடைந்த அன்னச்சத்திரத்தில் ஒன்றாக மது உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், மூன்று சிறார்கள் மற்றும் 22 வயது கிருஷ்ணன் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து மகேந்திரனைச் சரமாரியாகத் தாக்கிக் கொலை செய்துள்ளனர். அதன்பின்னர் கடைக்குச் சென்று கத்தி, கயிறு வாங்கி வந்த இவர்கள், மகேந்திரனின் கழுத்தைக் கத்தியால் அறுத்து, உடலில் கல்லைக் கட்டி பாழடைந்த அன்னச்சத்திரத்தில் உள்ள சிறிய கிணற்றில் போட்டுவிட்டு, கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளைக் கிணற்றில் வீசியுள்ளனர்.
மேலும், ஆடித்தீயில் தேங்காயைச் சுடுவது போல் அவரது தலையைத் தீயினால் சுட்டு, பின்னர் பையில் வைத்து கடையநல்லூரில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள சுற்றுலாத் தலமான குற்றாலத்திற்குச் சென்று அங்கே அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அதன்பின்னர் குற்றாலம் காவல் நிலையம் மற்றும் ஆயுதப்படை அலுவலகம் முன்பு உள்ள கலைவாணர் அரங்கில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கீழ் குழிதோண்டி தலையைப் புதைத்துவிட்டு, குற்றாலத்தில் குளித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.
அழுகிய நிலையில் பாழடைந்த கிணற்றில் கிடந்த உடல் மற்றும் தலையை மீட்ட காவல்துறையினர்: இதனைத் தொடர்ந்து கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த மகேந்திரனின் உடல் மற்றும் குற்றாலம் காவல் நிலையம் முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கீழ் புதைக்கப்பட்டிருந்த தலை ஆகியவற்றை 15 நாட்களுக்குப் பின்னர் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாகக் கடையநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில், கொலையாளிகளான மூன்று சிறார்களைக் கைது செய்தனர். தலைமறைவான கிருஷ்ணனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். குறிப்பாக மகேந்திரன் வீட்டில் இருந்து 4-ஆம் தேதி (அல்லது 6-ஆம் தேதி) வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என மனைவி புவனேஸ்வரி சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த அன்றே வழக்குப் பதிவு செய்து துரிதமாக விசாரணை மேற்கொண்டிருந்தால், இந்த குற்றச்சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை எனப் பலியான மகேந்திரனின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
“ஒரு பாட்டில் உள்ளே போகப் போக போதை வரும்; சில நாள் ஆக ஆக சுடுகாட்டுப் பாதை வரும்.” ‘பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும்’ என்பார்கள், ஆனால் இங்கு பூ நாரோடு சேர்ந்து நாசமானதால் நடந்த இந்த கொலைச் சம்பவத்தின் மூலம், மதுவில் மூழ்கியிருக்கும் நண்பர்கள் அனைவரும் விடுபட விழிப்புணர்வு ஏற்படுத்தும் நம் ஜெம் தொலைக்காட்சியுடன் எப்போதும் இணைப்பில் இருங்கள்.

