நீட் தேர்வு நிச்சயம் தொடரும்..! RSS குரலில் பேசும் நிர்மல் குமார்..!

Advertisements

ஒட்டு மொத்த நாடே மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததற்காக அதனை ஒரு திருவிழாவாக கொண்டாடி வரும் வேளையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்வதால் மட்டும் நீட் தேர்வு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பேசி இருக்காரு..மேலும், யார் பதவி விலகினாலும், விலகாவிட்டாலும் நீட் தேர்வு என்ற முறையே தமிழகத்திற்கு எப்போதுமே தேவையற்றது என்பதே தங்களது உறுதியான நிலைப்பாடு என்றும் கூறியிருக்காரு..நீட் எதிர்ப்பு போராட்டம் தலைநகர் டெல்லியில் 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் , இது குறித்து தமிழக முதல்வர் விஜய் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவே இல்லை என்பதும் விமர்சன பொருளாக மாறியுள்ளது.. இந்நிலையில், , “பாஜகதான் மாணவர்களை அடிக்கும், ஒடுக்கும்; ஆனால் தமிழக அரசு ஏன் மாணவர்களை அடிக்க வேண்டும்? நீங்கள் என்ன கோழையா?” என்று திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தவெக – வை கடுமையாக விமர்சனம் செய்துருக்காரு.. என்ன நடக்கிறது நீட் விவகாரத்தில், விரிவாக பார்க்கலாம் தற்பொழுது….

மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து நீட் தேர்வு குறித்து பேசி இருக்காரு.. அதில் , மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது நீட் தேர்வு பிரச்சனைக்கான தீர்வு இல்லை. இவர் பதவி விலகினாலும் நீட் தேர்வு தொடருமே. நம்முடைய கோரிக்கை நீட் தேர்வு வேண்டாம் என்பது தான். யார் பதவி விலகினாலும், விலகாவிட்டாலும் நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் நமது கோரிக்கை. டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, விரட்டி, விரட்டி போலீஸ் அவர்களை கைது செய்தது. இது போதாது என்று அமைச்சர் நிர்மல் குமார், “தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தால் எல்லாம் சரியாகிவிடுமா?” என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்நிலையில் மேலும் பேசிய அவர் , திமுக முன்னாள் அமைச்சர்கள் நீட் தேர்வு குறித்து எல்லாம் நிறைய பேசி இருக்கிறார்கள். இதை பேசக்கூடிய எந்த தகுதியும் திமுகவுக்கு கிடையாது. அவர்கள் தான் 5 வருடமாக இதனை மோசமான சூழ்நிலைக்கு கொண்டு போனார்கள். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் நீட் தேர்வை நிறுத்துவோம் என்று சொன்னார்கள். எப்படி நிறுத்துவார்கள். அது பார்லிமென்டில் பமசோதா நிறைவேற்ற வேண்டும். சுப்ரீம்கோர்ட் உத்தரவு, எப்படி நிறுத்துவீர்கள். தவறான நம்பிக்கையை மக்களிடத்தில் கொடுத்து இரண்டு வருடம் ஓட்டினார்கள்.

இப்பொழுது இறங்கி வந்து மேடையில் பேசுகிறார்கள். பேசக்கூடிய திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாருக்கும் தகுதி கிடையாது. நீட் தேர்வு வேண்டாம் என்பதில் நமது நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது, அதற்கான காலம் வரும் போது முதல் குரலாக நாம் குரல் கொடுப்போம்.நீட் தேர்வு தேவையற்றது. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிக சுமையை தான் கொடுக்கும். எந்த வித பயனும் இல்லை என்பதை நாம் தெளிவாக சொல்லி இருக்கிறோம் என்று பேசி இருக்காரு..

மேலும், நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் தவெக அரசு, இந்த போராட்டங்களுக்கு பெரிய அளவில் ஆதரவு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், அப்படியான எந்த நிலைப்பாட்டையும் அரசு எடுக்கவில்லை. மாறாக போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்தது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குள் சென்று, மாணவர் சங்க தலைவர்களை கைது செய்ய முயன்றது.

சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, மதுரை, கள்ளக்குறிச்சி, தஞ்சை, நெல்லை என தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டக்களத்தில் இறங்கினர். அவர்கள் அனைவரையும் கைது செய்து விடுவித்தது காவல்துறை. இது குறித்து விளக்கமளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அனுமதி இல்லாமல் போராடினதால்தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று விளக்கமளித்திருந்தார்.

ஆனால், மாணவர் சங்க தலைவர்கள் இது குறித்து கூறும்போது, “எங்களுக்கு காவல்துறையினருடன் சண்டையிட விருப்பம் கிடையாது. ஆனால், நாங்கள் அனுமதி கேட்டும் மறுக்கப்படுவதால் நாங்கள் வேறு வழியின்றி மல்லுகட்ட வேண்டியிருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக இருப்பதாக சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, மாணவர்களின் போராட்டத்திற்கு உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம் . அதேபோல டெல்லி மாணவர் போராட்டத்திற்கு தமிழகத்திலிருந்து அனைத்து கட்சிகளும் தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தன.

முதல்வர் விஜய் மட்டும் ஆதரவு தெரிவிக்காமல் இருந்து வந்தார். பின்னர் மாணவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி போராடி கைதான போதுதான் அவர் தனது ஆதரவை தெரிவித்தார். இதெல்லாம் தவெக மீதான விமர்சனங்களாக வெடித்திருந்தது. ஆரம்பம் முதல் தவெக மத்திய அரசுக்கு எதிராக தீவிரமாக பேச மறுக்கிறார் என்று சொல்லப்பட்டது.இதன் தொடர்ச்சியாக மாணவர் போராட்டம் குறித்து இன்று பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டால் மட்டும் பிரச்சனை சரியாகிவிடுமா? அவர் பதவி விலகுவது நீட் பிரச்சனைகான தீர்வு அல்ல” என்று பேசியிருக்கிறார்.

இந்நிலையில் , டெல்லி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா.ரஞ்சித், நடிகை ஆன்ட்ரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், தமிழக அரசையும் தவெகவையும் மிகக் கடுமையாக விமர்சித்தார். “பாஜகதான் மாணவர்களை அடிக்கும், ஒடுக்கும்; ஆனால் தமிழக அரசு ஏன் மாணவர்களை அடிக்க வேண்டும்? நீங்கள் என்ன கோழையா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

போராடும் மாணவர்களை ஒடுக்கக் காவல்துறைக்கு யார் உரிமை கொடுத்தது என்றும், காவல் துறை சீருடை (பேட்ஜ்) அணியாமல் மாணவர்களைத் தாக்குவது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் சாடினார். மாணவர்கள் அறவழியில் போராட உரிய இடத்தைக் கொடுத்து, அவர்களின் குரல்களுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்றும், மக்களோடு சேர்ந்து நிற்கும் அரசாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்காரு ..

மாணவர்களில் பெரும்பாலானோர் போராட்ட களத்தில் இருக்க.. தவெக தலைவர்கள் ஜனநாயகன் படத்தில் இருந்தார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது தவெகவுக்கு உண்மையில் மாணவர் போராட்டங்களில் அக்கறை இருக்கிறதா? என்று மாணவர்கள் கேள்வி எழுப்பி வருவதும் இங்கு கவனம் பெற்று வருகிறது..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *