குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!

Advertisements

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடியும் நிலையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதற்கிடையே கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதன் காரணமாக பல்வேறு நீரோடைகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. அதேநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இதில் மெயின் அருவியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்தது. பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மழை குறைந்து நீர்வரத்து சீராகும் பட்சத்தில் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை மழை குறைந்து நீர்வரத்து சீரானதையடுத்து குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி அருவியின் ஒரு பகுதியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைந்தனர். மேலும் நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *