
தாம்பரம் அருகே கூலி தொழிலாளியை கடுமையாக தாக்கும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பீர்க்கங்கரணை அருகே அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உடைக்கப்பட்டு அதன் செங்கல்கள் ஜல்லி உள்ளிட்டவைகளை லாரிகளில் விற்பனைக்காக ஏற்றி வந்தனர்.
அப்போது, அந்த பகுதிக்கு வந்த தமிழக வெற்றி கழகத்தின் செங்கல்பட்டு வட மேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜெய்கிருஷ்ணன், கட்டிடம் உடைத்துக் கொண்டிருந்த கிரேன் இயந்திரத்தை இயக்கும் கூலி தொழிலாளர்களிடம் தனக்கு ஒரு லாரி முழுவதும் இலவசமாக செங்கல், சல்லி உடைக்கப்பட்ட ரப்பீஸ் வேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளார்.
அப்போது, கிரேன் இயந்திர ஓட்டுநர் இதைப் பற்றி தனக்கு தெரியாது என்றும் கட்டிட உரிமையாளரிடம் பேசிக்கொள்ளுமாறு கூறியுள்ளார். உடனடியாக கோபம் அடைந்த ஜெய் கிருஷ்ணன் தனது தவெக கட்சியின் ஆட்களை வரவழைத்து கிரேன் ஓட்டுநர் மற்றும் கட்டிடத்தின் உரிமையாளரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.
அப்போது, அவர் என் ஊருல இருந்துட்டு எனக்கே நீ லோடு தர மாட்டியா என்று கூறி மிரட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தவெக கட்சி நிர்வாகி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.



