Advertisements

தமிழக மற்றும் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பதவி ஏற்றபின் முதல்முறையாக தில்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
கேரள ஆளுநரும், தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாகக் கவனித்து வருபவருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், திங்கள்கிழமை தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.
குடியரசுத் தலைவரை அவரது மாளிகையிலும், குடியரசுத் துணைத் தலைவரை நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் ஆளுநர் சந்தித்தார். தமிழக ஆளுநராக கடந்த மார்ச் 12-ஆம் தேதி பொறுப்பேற்ற பிறகு, இரு தலைவர்களையும் அவர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தச் சந்திப்புகள் குறித்து குடியரசுத் தலைவரும், துணைத் தலைவரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனது தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு ஆளுநர் அர்லேகர் செவ்வாய்க்கிழமை காலை திருவனந்தபுரம் திரும்புகிறார்.
Advertisements



