Tamilnadu : தற்காலிக சபாநாயகராக எம்.எல்.ஏ கருப்பையா தேர்வு.. யார் இவர்.?

Advertisements

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக தவெக கட்சியின் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.   தவெக ஆட்சி அமைத்த நிலையில் நாளை முதன் முறையாக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்தது.இருப்பினும், தவெக 118 என்னும் மெஜிக் எண் கிடைக்காததால்,ஆட்சி முடியாத சிக்கல் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் தொங்கு சட்டசபை உருவானது.இந்த நிலையில், திமுக கூட்டணியில் நீண்டகாலமாக இருந்த காங்கிரஸ் தன்னுடைய கூட்டணியை முறித்துக் கொண்டு முதல் ஆளாக தவெகவுடன் கூட்டணி அமைத்து ஆதரவு தெரிவித்தது.

இதன் மூலம் 107 ஆக எண்ணிக்கை 112 ஆக உயர்ந்தது.பின்னர் விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கேட்டது. இதனைத் தொடர்ந்து நீண்ட இழுப்பறிக்கு பிறகு விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆதரவு அளித்தது. இதனைத் தொடர்ந்து தவெக எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது.

இதனையடுத்து இன்று மே 10 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். முதல்வராக பொறுப்பேற்ற உடனே வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் அதிரடிப்படை அமைப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு படை உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார்.

இந்நிலையில் தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள கருப்பையா, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூரைச் சேர்ந்தவர்.1980 முதல் அதிமுகவில் செயல்பட்டு வந்த அவர் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்ட கருப்பையா, சுமார் 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் நடைபெற்ற 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அவருக்கு அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால் 2026 தேர்தலில் மீண்டும் சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.இதையடுத்து கடந்த மார்ச் மாதம் செங்கோட்டையனை சந்தித்த கருப்பையா, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். பின்னர் தவெக தலைவர் விஜய், அவருக்கு சோழவந்தான் தனித்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். அதனை சிறப்பாக பயன்படுத்திய கருப்பையா, மக்களின் ஆதரவுடன் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.

தற்போது அவருக்கு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *