
பாஜ கூட்டணி முறிவு பொதுச்செயலாளரின் முடிவு அல்ல, தொண்டர்களின் விருப்பப்படியே தேஜ கூட்டணியிலிருந்து விலகினோம் எனச் சேலத்தில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவின் சூரமங்கலம் பகுதி 1, 2ன் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று மாலை நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் என நிர்வாகிகள் ஒன்று கூடி, தொண்டர்களின் விருப்பத்தின் படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தில், பாஜ கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாக முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. பாஜ கூட்டணியின் முறிவு, அதிமுக பொதுச்செயலாளர் என்ற எனது முடிவு அல்ல. ஒட்டுமொத்த தொண்டர்கள் எடுத்த முடிவு. 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பின் பதில் தான், பாஜ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக எடுத்த தீர்மானம். அனைவரது சம்மதத்துடன் ஒரு கட்சி எடுத்த முடிவை, விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லையெனக் கூறுபவர்களுக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்கிறேன்.
ஒடிசா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை அறிவித்து விட்டா தேர்தலைச் சந்திக்கிறார்கள்?. அதுபோலவே தமிழ்நாட்டில் அதிமுக நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்கும். அதிமுகவை பொருத்தவரை மக்கள் தான் எஜமானர்கள். அவர்களின் நன்மைக்காகப் பாடுபடுவதோடு, நன்மை பயக்கும் திட்டங்களை ஆதரிப்போம். தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்போம். சிறுபான்மையினருக்கு ஒரு பிரச்னை என்றால், முதலில் குரல் கொடுப்பது அதிமுக தான். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதனைப் பின்பற்றுவோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

