
2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளித்ததால் கட்சியின் பலம் 120 ஆக உயர்ந்தது. அதன்படி, சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது.
விஜய், தற்போது முதலமைச்சராகியுள்ள நிலையில், காவல் மற்றும் உள்துறை, பொது நிர்வாகம் ஆகியவற்றை தன்வசம் வைத்துக் கொள்ள உள்ளார். அவருடன் 9 பேர் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டனர். அந்தவகையில் முதலமைச்சர் விஜயின் அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சரானார் கீர்த்தனா.
இவர், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்..29 வயதான இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணிதமும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை புள்ளியியலும் முடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய பன்மொழி புலமை கொண்ட இவர் நேரடி அரசியலுக்கு வருவதற்கு முனபு அரசியல் ஆலோசகராகப் பணியாற்றினார்.
பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்தில் இணைந்து திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் பின்னணியில் இருந்து செயல்பட்டார்.ஆந்திராவில் தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் அரசியல் ஆலோசனை குழுவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இதைத்தொடர்ந்து தவெகவில் இணைந்து நேரடி அரசியலில் பயணத்தை தொடங்கி, சிவகாசி சட்டமன்றத்தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெற்றார். இந்நிலையில் அங்கு போட்டியிட்டு 11,670 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்தநிலையில் முதலமைச்சர் விஜயின் அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சரானார் கீர்த்தனா.
இவர் அமைச்சரவையிலும் சட்டப்பேரவையிலும் மிக இளம் வயது உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்…



