ஜெகதீஷ் பழனிசாமிக்கு அரசியல் ஆசை.! சிங்கை ராமசந்திரனுக்கு CEO பதவி.?

Advertisements

முதல்வர் விஜய்யின் தனிச்செயலாளர்… தவெகவின் இணைப் பொருளாளர்… இந்த இரண்டு பெயர்களுக்குச் சொந்தமானவர்தான் இந்த ஜெகதீஷ் பழனிசாமி. விஜய் சினிமாவைவிட்டு முழுமையாக வெளியேறி, அரசியலில் கால் பதித்த அந்த முக்கியமான கட்டத்தில், தனது சினிமா காலத்து மேனேஜரான ஜெகதீஷுடனான ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரத்தான் விஜய் நினைத்தார். ஆனால், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தோ அல்லது அரசியலின் மீது கொண்ட ஈர்ப்பினாலோ, ஜெகதீஷ் தவெகவிலும் தொடர்ந்து பயணிக்க விரும்பினார். அப்படி உருவானதுதான் அவருக்குக் கிடைத்த அந்த ‘இணைப் பொருளாளர்’ பதவி.

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்று ஜெகதீஷ் எப்போதும் மீடியா வெளிச்சத்திலோ, மேடைப் பேச்சுகளிலோ அடிபடுபவர் கிடையாது.. அவர் முழுக்க முழுக்க ‘ரூட்’ (Route) நிறுவனத்தின் வாயிலாக சோசியல் மீடியா வியூகங்களை வகுப்பதில் மாஸ்டர். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே அவர் போட்டியிடுவார் என்று பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அப்பொழுது எந்தவித பதவிக்கும் ஆசைப்படாமல் ஒதுங்கி நின்றார். ஆட்சி அமைந்த பிறகும் கூட, திருச்சி கிழக்குத் தொகுதியில் அவர் நிற்பார் என்று பேசப்பட்ட நிலையில், எல்லாவற்றையும் கடந்து விஜய்யின் தனிச்செயலாளர் அரியணையில் அமர்ந்தார்.

ஆனால், இப்போது கதை வேறு ரூட்டில் பயணிக்கிறது! “எப்பவுமே ஒருத்தருக்கு நிழலாவே இருக்க முடியாது, நமக்கென தனித்த ஒரு அரசியல் அடையாளம் வேண்டும்” என்ற எண்ணம் இப்போது ஜெகதீஷின் மனதில் துளிர்விட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். தவெகவின் மிக முக்கியமான ‘இளைஞரணிப் பொறுப்பை’ தட்டித் தூக்க வேண்டும் என்பதற்காக அவருக்குப் பின்னால் இருக்கும் சில விசுவாசிகள் காய் நகர்த்தி வருகிறார்கள். திரைக்குப் பின்னால் இருந்து கட்சியை இயக்குவதைவிட, இயக்கத்தின் முகமாக மாற வேண்டும் என்ற இந்த திடீர் அரசியல் ஆசை இப்போது விஜய் காதுகளுக்கும் சென்று சேர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில் , மறுபுறம் பார்த்தோமென்றால், அதிமுகவிலிருந்து அதிரடியாக விலகி தவெகவில் இணைந்த சிங்கை ராமசந்திரனுக்கு, முதல்வர் விஜய்யின் நேரடி அப்பாயிண்ட்மென்ட் மிக எளிதாகக் கிடைத்துள்ளது..முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் போன்ற சீனியர்களுக்கே விஜய்யை நேரில் சந்திப்பதில் பலத்த தடைக்கற்கள் இருந்தன. விஜய்யை பார்க்க முடியாமல் அவர்கள் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இணையும் சூழல் ஏற்பட்டது. சி.விஜயபாஸ்கர் தரப்போ, மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட விழா எடுத்தும் கூட விஜய்யின் நேரடி சந்திப்பு கிடைக்காமல் அப்செட் ஆனார்கள்.

ஆனால், ஐடி விங்கில் இருந்து வந்த சிங்கை ராமசந்திரனுக்கு மட்டும் எப்படி இந்த சிவப்புக் கம்பள வரவேற்பு? இதற்குப் பின்னால் எஸ்.பி.வேலுமணி, நிர்மல்குமார் ஆகியோருடன் சேர்த்து, நம் ஜெகதீஷ் பழனிசாமியின் பெயரும் அடிபடுகிறது. ஜெகதீஷின் தொழில்நுட்ப அறிவு மற்றும் திரைத்துறையினருடனான நெருக்கம்தான், சிங்கை ராமசந்திரனுக்கும் அந்த ஹை-லெவல் மீட்டிங்கை சாத்தியப்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. விரைவில் இவருக்கு ‘Startup TN CEO’ போன்ற மெகா பொறுப்புகள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பக்கம் ஜெகதீஷ் பழனிசாமியின் அரசியல் பசியும், மறுபக்கம் சிங்கை ராமசந்திரன் போன்ற மாற்றுக்கட்சித் தலைவர்களின் அதிரடி என்ட்ரியும் தவெகவிற்குள் ஒரு அண்டர்கரண்ட் அரசியலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது..60 வருட அரசியல் கட்சிகளில் இருந்து விலகி , தற்பொழுது அனுபவமே இல்லாத தமிழக வெற்றி கழகத்தில் அன்றாடம் பலர் வந்து இணைகின்றனர்.. இவை அனைத்தும் முதல்வர் விஜய்க்கு ஒரு பிளஸ் – ஆகவே பார்க்கப்படுகிறது..மேலும் , கட்சியில் இணைந்த அனைவருக்கும் எதாவது ஒரு துறையில் ஒரு முக்கிய பதவி வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடதக்கது..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *