
தில்லி ஐஐடியின் 57ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பட்டங்களையும் விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தார்.
தில்லி ஐஐடியின் 57ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது ஐஐடி ஆட்சிமன்றக் குழுத் தலைவர் ஹரீஷ் சால்வே, இயக்குநர் ரங்கன் பானர்ஜி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்தியக் கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோசிக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
விழாவில் உரையாற்றிய மத்தியக் கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோசி, கற்பவரை மையப்படுத்திய, ஆராய்ச்சி நோக்கமுடைய, எதிர்காலத்துக்குத் தயாரானதாக நமது கல்விச் சூழலை உருவாக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம் என்று கூறினார். இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள் வெறும் பட்டதாரிகளை மட்டுமல்லாமல் கண்டுபிடிப்பாளர்களையும் ஆராய்ச்சியாளர்களையும், நாட்டைக் கட்டமைப்பவர்களையும் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் விரும்புவதாகவும், அதற்குவாழும் சான்றாகத் தில்லி ஐஐடி விளங்குவதாகவும் தெரிவித்தார்.
ஐஐடியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குக் குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம், இயக்குநரின் தங்கப் பதக்கம், சங்கர் தயாள் சர்மா தங்கப்பதக்கம், சிறந்த பத்துப் பேருக்கான தங்கப் பதக்கங்கள் ஆகியவற்றைப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
அரியானா மாநிலம் சோனிப்பட்டில் உள்ள தில்லி ஐஐடி வளாகத்தில் செயற்கை நுண்ணறிவுத் திறன்கொண்ட பரம் பிரக்யா என்னும் பெயர்கொண்ட அதிவிரைவுக் கணினியையும் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.


