தாஜ் மஹால் (Taj Mahal), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், அதிசயமானது. இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது.
வரலாறு;
இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மஹாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.
தோற்றம்:
1631 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசை ஆண்ட ஷாஜகானின் மூன்றாம் மனைவி மும்தாஜ், அவர்களது 14 ஆவது பிள்ளையான குகாரா பேகம் பிறந்தபோது இறந்துவிட்டாள். பெருந் துயரம் அடைந்த மன்னன் அவளது நினைவாக இந்தக் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியதாகவே அவனது வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. மும்தாஜ் இறந்த அதே ஆண்டிலேயே தாஜ்மஹாலின் கட்டிட வேலைகள் தொடங்கின. முதன்மைக் கட்டிடம் 1648 இல் கட்டி முடிக்கப்பட்டது. சூழவுள்ள கட்டிடங்கள், பூங்கா ஆகியவற்றின் கட்டிட வேலைகள் ஐந்து ஆண்டுகள் கழித்தே நிறைவேறின.
பாரசீகக் கட்டிடக்கலை மரபுகளையும், முன்னைய முகலாய மரபுகளையும் உள்ளடக்கியும், அவற்றை மேலும் விரிவாக்கியும் கட்டப்பட்டுள்ளது. ஷாஜகான் வெண்ணிறச் சலவைக் கற்களைப் பயன்படுத்தியுள்ளார்.அமைப்பு;
தாஜ்மஹாலின் மையம் வெண்ணிறச் சலவைக் கல்லாலான சமாதிக் கட்டிடம் ஆகும். இது சதுரமான தளம் ஒன்றின் மீது அமைந்த, சமச்சீர் வடிவம் கொண்டதும், வளைவு வடிவிலான நுழை வாயில், பெரிய குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டதுமான ஒரு கட்டிடம். பெரும்பாலான முகலாயச் சமாதிகளைப் போலவே இதன் அடிப்படைக் கூறுகளும் பாரசீகக் கட்டிடக்கலை சார்ந்தனவாகும். இதன் அடிப்பகுதி பல அறைகளைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும். இது ஒவ்வொரு பக்கமும் 55 மீட்டர்கள் நீளம் கொண்ட கனக் குற்றி வடிவமானது.
இதன் உச்சியில் தாமரை வடிவ அலங்கார அமைப்பின் மீது அழகான கலசம் காணப்படுகிறது.
பூங்கா;
தாஜ்மஹால் கட்டிடத் தொகுதி, 300 மீட்டர் நீளமும், 300 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு முகலாயப் பூங்காவைச் சுற்றி அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நடை பாதைகள், பூங்காவின் நான்கு காற்பகுதிகளையும் 16 பூம்படுகைகளாகப் பிரிக்கின்றன. இப் பூங்காவைப் பற்றிய பழையகாலக் குறிப்புக்கள், இங்கே பலவிதமான பூஞ்செடிகளும், பழமர வகைகளும் ஏராளமாக இருந்ததாகக் கூறுகின்றன.
அமில மழை:
தாஜ் மஹால் அமில மழையால் மெல்ல மெல்ல சேதமடைந்து வருகிறது. அருகில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. 1996 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதி மன்றம் தாஜ்ம ஹாலைச் சுற்றி உள்ள 10,400 சதுர கிலோ மீட்டர் பகுதியில் உள்ள அனைத்து தொழிலகங்களும் நிலக்கரிக்குப் பதில் இயற்கை எரிவாயுவையே பயன்படுத்த வேண்டும் என ஆணையிட்டது.

தாஜ்மஹால் பற்றி சுவாமி விவேகானந்தரின் கருத்து:
சுவாமி விவேகானந்தர் தாஜ்மகாலைப் பார்த்த போது கூறிய கருத்து: “இங்குள்ள சலவைக் கல்துண்டு ஒன்றைப் பிழிய முடியுமானால் அதிலிருந்துகூட அந்த அரசனின் காதலும் சோகமும் சொட்டும். இதன் உள்ளே உள்ள அழகு வேலைப்பாட்டைக் கற்க வேண்டுமானால், ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும் ஆறுமாதமாவது தேவைப்படும்.
ஆழமான அழகான காதல் சின்னம் இன்று வரை அனைத்து காதலர்களுக்கும் விருப்பப்பட்ட இடமாக விளங்குவது சிறப்பு.





