Sexual Harassment: 70 ஆண்டுகள் சிறை தண்டனை!

Advertisements

ஈரோடு: அரசு பஸ்சில் பயணித்த அரசு பள்ளி மாணவிகள் 10 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கண்டக்டருக்கு 70 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம் கோபி நஞ்சகவுண்டன்பாளையம் புதுக்காடு 4வது வீதியை சேர்ந்த பெருமாள் மகன் சரவணன் (49). இவர், கோபியில் இருந்து நம்பியூர் வரை செல்லும் அரசு டவுன் பஸ்சின் (2-ம் நம்பர்) கண்டக்டராக பணியாற்றி வந்தார்.

இந்த பஸ்சில் பயணம் செய்த அரசு பள்ளிகளில் படிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட மாணவிகளின் மீது உரசுவது, கன்னங்களை கிள்ளுவது, கண்ணடிப்பது, தோளின் மீது கையை வைப்பது, படிக்கட்டில் மாணவிகள் ஏறும்போது முதுகை பிடித்து தள்ளுவது மற்றும் கிண்டலாக பேசுவது போன்ற பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதேபோல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி சரவணன் அவரது பஸ்சில் பயணித்த அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதில், பாதிக்கப்பட்ட மாணவிகள் 10 பேர் நம்பியூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீசார் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, சரவணன் மீது போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மகிளா நீதிமன்ற நீதிபதி மாலதி நேற்று இறுதி விசாரணை முடித்து தீர்ப்பளித்தார்.

அதில், ‘அரசு பள்ளி மாணவிகள் 10 பேருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த கண்டக்டருக்கு சரவணனுக்கு தலா 7 ஆண்டுகள் என 70 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்’ என தெரிவித்தார்.

மேலும், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட 10 மாணவிகளுக்கும் தலா ரூ.50 ஆயிரம் நிவாரண தொகையாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரைத்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜெயந்தி ஆஜரானார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *