செஞ்சி பகுதியில் நடைபெறும் விதிமீறல்களை உடனடியாகத் தடுத்து, நீர்நிலைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டாரத்தில்,மண் எடுப்பதற்கு அரசு அனுமதி வழங்கியிருக்கும் நிலையில் இது தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அதன் பாதிப்பு பல தலைமுறைகளைத் தாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியும், நிர்வாகம் அதனை உடனடியாகக் கவனத்தில் கொள்ளாததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
செஞ்சி வட்டாரத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள அனைத்து நீர்நிலைகளிலும் நடைபெற்ற மண் அகழ்வுப் பணிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். மக்களின் நீராதாரத்தைக் காக்க வேண்டிய அரசு, இயற்கை வளங்களைச் சுரண்டும் செயல்களுக்குத் துணை நிற்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். செஞ்சி பகுதியில் நடைபெறும் விதிமீறல்களை உடனடியாகத் தடுத்து, நீர்நிலைகளையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

