சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரியார்பற்றி அவதூறாகப் பேசியதாகக் கோவை, சேலம், மதுரை, நெல்லை, திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்து வரும் நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியார்குறித்து சர்ச்சைக்குரிய பேசிய சீமான் மீது கலவரத்தைத் தூண்டும் விதமாகப் பேசுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துகளைப் பேசுவது ஆகிய பிரிவுகளில் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாருக்கு எதிராகக் கடுமையாகப் பேசி வருகிறார். ஜனவரி 8 ஆம் தேதி கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, சீமான், தந்தை பெரியார்குறித்துப் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, சீமானுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பெரியார்குறித்து சீமான் அவதூறாகப் பேசியதாகத் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலைச் சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் உள்ள சீமானின் வீட்டைத் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் முற்றுகையிட முயன்றனர்.
அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரியார்குறித்து அவதூறாகப் பேசியதாகத் திமுக சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக சட்டத்துறை துணைச் செயலாளர் மருது கணேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெரியார்குறித்து பொய்யான தகவலைக் கூறிய சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெரியார்குறித்து சீமான் பேசிய வீடியோ ஆதாரங்களுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சீமான் மீது திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பெரியார் எந்த இடத்திலும் தெரிவிக்காத கருத்தை, அவரின் நன்மதிப்பை குலைக்கும் வகையில் ஆதாரமின்றி பொய்யான செய்தியைச் சீமான் தெரிவித்துள்ளார். சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
புகார்களைத் தொடர்ந்து, சீமான் மீது கோவை மாவட்டத்தில் 6 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தடாகம், பெரியநாயக்கன் பாளையம், பொள்ளாச்சி கிழக்கு, ஆனைமலை, மகாலிங்கபுரம், மேட்டுப்பாளையம் ஆகிய 6 காவல் நிலையங்களில் அவர்மீது இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியார்பற்றி அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இதுவரை கோவை, கடலூர், சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.சீமான் மீது போலீசில் புகார்கள் குவிந்து வருவதால், அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.