
பெங்களூரு:கர்நாடகா பாஜகவின் வாரிசுச் சண்டை காரணமாக நெடியூரப்பா மகனை எதிர்த்துச் சிவ மோகா தொகுதியில் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா தனது கருத்துக்களாலும் நடவடிக்கைகளாலும் எப்போதும் பரபரப்பை கிளப்புவார்.
கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்குச் சீட் வழங்காததால் பாஜகவிலிருந்து விலகப்போவதாக எச்சரித்தார். பிரதமர் நரேந்திர மோடி அவரைச் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதை தொடர்ந்து, தன்னுடைய முடிவைக் கைவிட்டார்.
மகனுக்கும் சீட் மறுப்பு!
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தனக்கு அல்லது தன் மகன் காந்தேஷூக்கு சீட் வழங்க வேண்டும் எனக் கோரினார்.
ஆனால் ஷிமோகா தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கு சீட் வழங்கப்பட்டது. அதனால் கோபமடைந்துள்ள ஈஸ்வரப்பா கடந்த இரு தினங்களாகத் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸ் வாரிசு அரசியலைப் போல்..
இதுகுறித்து ஈஸ்வரப்பா கூறுகையில்,
” எனக்கு எதிராக எடியூரப்பா சதி செய்கிறார். என் மகனுக்குச் சீட் வழங்காமல் அவரது மகனுக்குச் சீட் வழங்கியுள்ளார். காங்கிரஸ் வாரிசு அரசியல் செய்வதாகக் கூறும் பாஜக தலைவர்கள் எடியூரப்பாவின் வாரிசு அரசியலை கேள்வி கேட்பதில்லை.
ஒரு மகனுக்கு (விஜயேந்திரா) கட்சியின் மாநில தலைவர் பதவி, இன்னொரு மகனுக்கு (ராகவேந்திரா) எம்.பி சீட் கொடுத்திருக்கிறார்.
தனக்கு நெருக்கமான மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலா ஜேவுக்கு பெங்களூரு வடக்கு தொகுதியை ஒதுக்கியுள்ளார். இன்னொரு ஆதரவாளர் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஹாவேரி தொகுதியை வாங்கி தந்திருக்கிறார். என்னைப் புறக்கணிக்கும் எடியூரப்பாவுக்கு பாடம்கற்பிக்க முடிவெடுத்துள்ளேன்.
ஷிமோகாவின் அவரது மகன் ராகவேந்திராவுக்கு எதிராக நான் சுயேச்சையாகப் போட்டியிட முடிவெடுத்துள்ளேன். இதனால் என்னை பாஜகவிலிருந்து நீக்கினாலும் பரவாயில்லை. எனக்குத் தொண்டர் பலம் இருப்பதால் நிச்சயம் வெற்றிப் பெறுவேன்.
இவ்வாறு ஈஸ்வரப்பா தெரிவித்தார். இவரது இந்த அறிவிப்பால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
“முதல்வர்”களின் வாரிசுகள்மோதும் ஷிமோகா!
ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகள் கீதா சிவராஜ்குமார் களம் இறக்கப்பட்டு இருக்கிறார். இவர் கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியும் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மருமகளும் ஆவார்.
தற்போது பாஜக வேட்பாளரும் எடியூரப்பாவின் மகனுமான ராகவேந்திராவுக்கு எதிராக அந்தக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதலமைச்சர் ஆன ஈஸ்வரப்பா சுயேட்சையாகப் போட்டியிடுவேன் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளருக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் என அவருடைய ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.


