Electoral Bonds Case: அனைத்து விவரங்களையும் வெளியிட எஸ்.பி.ஐ. வங்கிக்குச் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

Advertisements

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கிக்குச் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி: அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்து கடந்த மாதம் 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பத்திரங்களைப் பெற்றவர்கள், அவற்றைப் பணமாக்கிய அரசியல் கட்சிகள், நன்கொடை தொகை உள்ளிட்ட விவரங்களைத் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்குமாறு எஸ்.பி.ஐ. வங்கிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வங்கி தேர்தல் பத்திரங்களைப் பெற்றவர்களின் விவரங்களை அளித்தது. இந்த விவரங்களைத் தேர்தல் ஆணையம் பொதுவெளியில் பகிர்ந்தது. இதில் தேர்தல் பத்திர எண், யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு தொகை நன்கொடையாக வழங்கினார்கள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதையடுத்து, தேர்தல் பத்திரத்தின் எண், தேர்தல் பத்திரத்தை வாங்கிய நபர், எந்தக் கட்சிக்கு அவர் நிதி வழங்கியுள்ளார், எவ்வளவு பணம், டெனாமினேசன், ஆகியவற்றை வழங்க வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கிக்குச் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்ய வேண்டும் என முதல் உத்தரவிலேயே தெளிவாக உள்ளது என்றும், அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யாதது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அத்துடன், எஸ்.பி.ஐ. வங்கியின் நடவடிக்கையில் திருப்தியில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தின் உத்தரவுகளை நாங்கள் புரிந்துகொண்டதன் அடிப்படையிலேயே தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது என்று எஸ்.பி.ஐ. வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் பத்திரங்கள் சார்ந்த அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் வருகிற வியாழன் அன்று மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கிக்குச் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *