
மீனவர் நலனைப் பாதுகாக்க கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 23 தீர்மானங்கள் அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை: அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளில் சமீபத்தில் மரணமடைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சென்னை மற்றும் தென் மாவட்ட மழை வெள்ளத்தில் பலியான மக்களுக்கு ஒரு நிமிடம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கூட்டம் தொடங்கியது. இந்த நிலையில், அதிமுக செயற்குழு-பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இலங்கை தமிழர்கள் நலன் காக்க இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி குளறுபடி இல்லாத வாக்காளர்கள் பட்டியல் அமைக்கத் தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர் வரும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக மரபுகளைக் கடைப்பிடிக்காத பேரவைத்தலைவருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மீனவர் நலனைப் பாதுகாக்க கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவசர கதியில் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த நினைக்கும் தமிழ்நாடு அரசுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள இஸ்லாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றி மறுவாழ்வு அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கும் உண்டு என்பதை உணர்ந்து தேவையான நிதி உதவியைத் தமிழ்நாட்டுக்கு வழங்க முன்வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் பெரும்பாலானவை திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருக்கின்றன.

