மாணவர்கள் மத்தியில் இருந்து மறையும் S.S.N இன்ஜீனியரிங் கல்லூரி..!

Advertisements

அண்ணா பல்கலைகழகத்தில் சீட் கிடைக்கவில்லையென்றாலும் இந்த  கல்லூரியில் இடம் கிடைத்தால் போதுமென்று மாணவர்கள் கருதும் கல்லூரி ஒன்று, மாணவர்கள் கண் முன்பு இருந்து மறைய போகிறது. தமிழ்நாட்டின் டாப்  தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒன்று  சென்னை எஸ்.எஸ். என் கல்லூரி. 1996ம் ஆண்டு ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் சிவநாடாரால் தந்தை  ஸ்ரீ சுப்ரமணிய நாடார் பெயரில் இது  தொடங்கப்பட்டது.

இந்த கல்லூரியில் வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையை நிறுத்தப்போவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.இது பொறியியல் கலந்தாய்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவ நாடார் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள  65% இடங்கள் அண்ணா பல்கலைக்கழகப் பொதுக் கலந்தாய்வு  மூலமாகவும், மீதமுள்ள இடங்கள் மேனேஜ்மென்ட் கோட்டா ஒதுக்கீட்டிலும் நிரப்பப்படுகின்றன. சென்னையின் சிறந்த இன்ஜீனியரிங் கல்லூரிகளில் ஒன்றாக எஸ்.எஸ்.என் பார்க்கப்படுகிறது. தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே தமிழகத்தின் 6வது சிறந்த பொறியியல் கல்லூரியாக எஸ்.எஸ். என் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 2026-27  கல்வி ஆண்டு முதல், எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் பி.இ  மற்றும் பி.டெக்  படிப்புகளுக்குப் புதிதாக மாணவர் சேர்க்கை நடைபெறாது . எனவே, SSN School of Engineering at Shiv Nadar university  , chennai (SNUC) பல்கலையில் விண்ணப்பிக்கவும் என்று எஸ்.எஸ். என் கல்லூரி இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இளம் மற்றும் முதுநிலையில், 4,800 மாணவ, மாணவிகள் இங்கு  படிக்கின்றனர். இவர்கள், அனைவரும் அண்ணா பல்கலையில் இருந்து பட்டம் பெறுவார்கள். 2026- 27 ம் ஆண்டில் இருந்து அட்மிஷன் முறைகள் மாறுபடும். இனிமேல், சேரும் மாணவர்கள் SSN School of Engineering at Shiv Nadar university நடத்தும் என்ட்ரன்ஸ் மற்றும் இன்டர்வியூவில் பாஸாக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் சிவ நாடார் என்ற பெயரில் தனிப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.  தற்போது, அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் எஸ்.எஸ்.என் கல்லூரியை, முழுமையாக தங்களது பல்கலைக்கழகத்துடன் இணைக்க நிர்வாகம்  திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதாவது, இனி எஸ்.எஸ்.என் கல்லூரி‘ என்ற பெயரில் தனியாகக் கல்லூரி இயங்காது; அது ‘சிவ நாடார் பல்கலைக்கழகத்தின்’ ஒரு பகுதியாக மாறிவிடும். எஸ்.எஸ்.என்  கல்லூரி தனியார் பல்கலைக்கழகமாக மாறிவிட்டால், அண்ணா பல்கலைக்கழகக் கலந்தாய்வின்  கீழ் வராது. இதனால், அரசு நிர்ணயித்த குறைவான கட்டணத்தில், மெரிட் அடிப்படையில் எஸ்.எஸ்.என். கல்லூரியில்  சேரும் வாய்ப்பு ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த  மாணவர்களுக்குப் பறிபோகும்.

இதுவரை அரசு கோட்டாவில் இந்த கல்லூரியில் சேருபவர்கள் 55 ஆயிரம் கட்டணமாக செலுத்தினால் போதுமானது. இனி அங்குச் சேர வேண்டுமென்றால், அந்தப் பல்கலைக்கழகம் நடத்தும் தனியான நுழைவுத் தேர்வில்  தேர்ச்சி பெற வேண்டும் .  தனியார் பல்கலைக்கழகமாக மாறும்போது, கல்விக் கட்டணம் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது.

“ஏற்கனவே படிக்கும் மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. தற்போது, படித்து கொண்டிருப்பவர்கள் அவர்கள் பட்டம் பெறும் வரை அல்லது  அரியர்களை முடிக்கும் வரை இந்த நடைமுறைதான் அமலில் இருக்கும். ஆனால், அடுத்த ஆண்டு முதல் புதிய அட்மிஷனில்  நடைமுறைகள் மாறும்” என்று எஸ்.எஸ்.என் நிர்வாகம் தரப்பில் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இணையாகக் கட்டமைப்பும், தரமும் கொண்ட ஒரே தனியார் கல்லூரி தமிழகத்தில் எஸ்.எஸ். என் கல்லூரிதான்.  கிராமப்புற மாணவர்கள் பலரின் முன்னணி சாய்சான இந்த கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி, கவுன்சிலிங்கில் இருந்து விலகினால், அது தமிழக மாணவர்களுக்கு இழப்பாகவே பார்க்கப்படும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *