M. K. Stalin: விழுப்புரத்தில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

Advertisements

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து பிரசார வேன் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார். விழுப்புரம், கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

விழுப்புரம்:தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் உள்ள மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார், கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து அவர்களுக்கு வாக்குகள் சேகரித்து பேசுகிறார்.

இதற்காக வி.சாலை பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாளை மாலை 3 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து பிரசார வேன் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூரில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இக்கூட்டத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமிட்டல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோர் மேற்பார்வையில் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். பொதுக்கூட்ட மைதானம் மற்றும் முதலமைச்சர் வருகை தரும் வழிநெடுகிலும் என 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

விழுப்புரம் பிரசார பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு நாளை இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடலூர் புறப்பட்டு செல்கிறார். அங்கு தங்கும் அவர், மறுநாள் 6-ந் தே தி (சனிக்கிழமை) சிதம்பரம் லால்புரத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வக்கீல் சுதா ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *