டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் – முதல்வர் விஜய் புகழாரம்!

‘அவ்வை இல்லம்’, ‘அடையாறு புற்றுநோய் நிலையம்’ போன்ற மகத்தான நிறுவனங்களை உருவாக்கியதோடு, குழந்தைத் திருமண தடைச்சட்டத்துக்கு வித்திட்ட சமூகப் போராளி மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி என்று  முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் மறைந்த மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும்,  பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளில் அவரது மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து போற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆதரவற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் புகலிடமாக ‘அவ்வை இல்லம்’, புற்றுநோயாளிகளின் வாழ்வொளியாக ‘அடையாறு புற்றுநோய் நிலையம்’ போன்ற மகத்தான நிறுவனங்களை உருவாக்கியதோடு, குழந்தைத் திருமண தடைச்சட்டத்துக்கு வித்திட்ட சமூகப் போராளி என்று புகழாரம் சூட்டினார். அவரது உயரிய இலட்சியங்களும், பெண் முன்னேற்ற முன்னெடுப்புகளும், தலைமுறைகளைக் கடந்து என்றும் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டார்.

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத் தளப் பதிவில்,  மருத்துவம், பெண்கள் கல்வி, சமூக நீதி ஆகிய துறைகளில் அழியாத தடம் பதித்த தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்தநாளில், அவரது உயர்ந்த சேவைகளையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்வதாகத் தெரிவித்துள்ளார். அவரது கனவுகளும் கொள்கைகளும் என்றும் நமக்கு ஊக்கமாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *