
ராமேசுவரம்:
மன்னார், நெடுந்தீவு கடற்பகுதியில் 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், 3 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற முனியேந்திரன் என்பவரின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்பகுதியில் புதன்கிழமை இரவு கைப்பற்றினர். இதிலிருந்து ஜோதிராஜன், ராமு, அருள்ஜார், ஜான் கென்னடி என்ற 4 மீனவர்களைக் கைது செய்தனர்.
மேலும், ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற சூசை வியாகுலம் மற்றும் ஆல்ட்ரின் என்பவர்களுக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை அதிகாலை கைப்பற்றினர். இந்தப் படகுகளில் இருந்த ஜான் முத்துக்குமார், லவ்சன், பவுல்ராஜ், அந்தோணி செல்வம், ஜான்போஸ்கோ, ஜான்ராஜ் என்ற 6 மீனவர்களைக் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
