
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் காந்தி சாலையில் நகராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு ஆணையாளராகக் கிருஷ்ண மூர்த்தி பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ஆணையாளர் அறையில் கடந்த மாதம் 25-ந் தேதி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணனை, நகர தி.மு.க. செயலாளர் நவாப் தரக்குறைவாகப் பேசியதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி மாநில மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் தி.மு.க. நகர செயலாளர் நவாப்பை கண்டித்து துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதற்கிடையே நகராட்சியில் பணிபுரியும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் நகராட்சி தலைவர் பரிதா நவாப் மற்றும் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தியுடம் ஒரு புகார் கொடுத்தனர்.
அதில் துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன் தங்களை தரக்குறைவாகப் பேசுவதாகவும், மன உளைச்சல் கொடுப்பதாகவும் கூறி இருந்தனர்.
நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய டெங்கு தடுப்பு பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு துப்புரவு அலுவலர் ராம கிருஷ்ணனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தொடர் போராட்டங்களால் பரபரப்பாக இருந்த கிருஷ்ணகிரி நகராட்சியில், தற்போது அமைதி திரும்பிய நிலையில், மீண்டும் மற்றொரு சூறாவளியாக ஆணையாளர் அறையில் கடிகாரத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் ஆணையாளர் அறையில் கடந்த 25-ந்தேதி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், நகர தி.மு.க. செயலாளர் நவாப் ஆகியோர் அமர்ந்து காரசாரமாகப் பேசுவதும், நகராட்சி ஆணையாளர் அவர்களைச் சமாதானப் படுத்துவதுமான வீடியோ காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடிகாரத்தில் ரகசிய கேமிராவை வைத்து யார்? என்பது குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப்பை தி.மு.க.விலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டு அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. நகர செயலாளர் எஸ்.கே.நவாப் கழக கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட நவாப்பின் மனைவி பரிதா நவாப் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
