நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘டி56’ படத்தின் பூஜை, சிவகங்கை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 25) வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்பத்தூர் அருகே உள்ள மாரநாடு கருப்பணசாமி கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, ‘டி56’ படத்தை இயக்குகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார். படத்தின் வெற்றிக்காக நடைபெற்ற சிறப்பு பூஜையில் தனுஷ், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி முகுந்தன், சாய் அபயங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
இதனிடையே, மாரநாடு கருப்பணசாமி கோவிலில் தனுஷ் 18 அடி நீளமுள்ள அரிவாளை காணிக்கையாக வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சியை முன்னிட்டு 16 கிடாக்கள் வெட்டி ரசிகர்களுக்கு விருந்து வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ‘டி56’ படத்தின் பூஜை நிகழ்ச்சியை முன்னிட்டு தனுஷின் ரசிகர்கள் ஏராளமானோர் கோவில் வளாகத்தில் திரண்டனர். மாநாடு போல் ரசிகர்கள் குவிந்த நிலையில், தனுஷுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நடிகர் வடிவேலு உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ‘டி56’ படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன. படத்தின் படப்பிடிப்பு மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

