‘சேயோன்’ படம் குறித்து மனம் திறந்த சந்தோஷ் நாராயணன்!

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சிவகார்த்திகேயனுடன் பாக்யஸ்ரீ போர்சே ஜோடி சேர, பால சரவணன் மற்றும் அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் இப்படம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் குறித்துப் பேசிய சந்தோஷ் நாராயணன், “ ‘சேயோன்’ படத்தை வெறும் வேலையாக மட்டும் நான் பார்க்கவில்லை. இது எனது தனிப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு. இதுவரை நான் கற்றுக்கொண்ட நுணுக்கங்கள் அனைத்தையும் பயன்படுத்தி, இதில் எனது மிகச்சிறந்த பங்களிப்பை வழங்க முயற்சி செய்து வருகிறேன். நிச்சயம் இப்படம் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சிவகார்த்திகேயனுடனான தனது நீண்ட கால நட்பையும், அவரின் வளர்ச்சி குறித்தும் நெகிழ்ச்சியுடன் பேசிய சந்தோஷ் நாராயணன், “தொலைக்காட்சித் துறையில் இருந்து சினிமாவுக்கு வருவது என்பது அந்த காலகட்டத்தில் மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. அந்தத் தடைகளை எல்லாம் உடைத்து, கடினமாக உழைத்து இன்று ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார் சிவா. எங்களுக்குப் பின்னால் எவ்விதப் பின்னணியும் இல்லை. இருவருமே உணர்ச்சிகளை வெளிப்படையாகப் பேசக்கூடியவர்கள். சிவாவின் இந்த வளர்ச்சி கண்டு நான் மிகுந்த பெருமை கொள்கிறேன்” என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *