யாருக்காக இது யாருக்காக
இந்தமாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக
காதலே போ போ காதலே வா வா
மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
என்ற பாடல் வரிகளின் மூலம் நமக்கு காதல் என்றால் என்னவென்ற எடுத்துரைத்த நாயகன், நடிப்பு என்றால் சிவாஜி, சிவாஜி என்றால் நடிப்பு என்ற புகழுக்கெல்லாம் சொந்தக்காரனான் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் வாழ்க்கை வராற்று பாதையை நம் ஜெம் தொலைக்காட்சி முலம் பார்க்கலாம்.
தமிழ் சினிமா வரலாற்றில் நடிப்பின் தந்தை என்றழைக்கப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 1928-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி கோட்டைகளின் பூமி என்றழைக்கப்படும் விழுப்புரத்தில் சின்னையா மண்ராயர் – ராஜாமணி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்த கணேசன், சிறு வயதிலேயே நாடகத்தின் மீது ஆர்வம் கொண்டு மேடை உலகிற்குள் தன் பொற் பாதத்தின் மூலம் அடியெடுத்து வைத்தார்.
ஆறு வயதிலேயே நாடகக் குழுவில் இணைந்த அவர், பல்வேறு வேடங்களில் நடித்து தனது திறமையை வளர்த்துக் கொண்டார். அண்ணாவின் “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” நாடகத்தில் மராத்திய மன்னர் சிவாஜி கதாபாத்திரத்தில் நடித்தபோது, அவருக்கு “சிவாஜி” என்ற பெயர் கிடைத்தது. பின்னர் அந்தப் பெயரே தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அடையாளமாக மாறியது.
நாடக மேடையில் தனது குரல், வசன உச்சரிப்பு, முகபாவனை, உடல் மொழி என அனைத்திலும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிய சிவாஜி கணேசனுக்கு சினிமா கதவு திறந்தது 1952-ஆம் ஆண்டு. பராசக்தி திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான அவர், முதல் படத்திலேயே தனது அழுத்தமான நடிப்பால் ரசிகர்களையும் திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார். கருணாநிதியின் கூர்மையான வசனங்களும், சிவாஜியின் கம்பீரமான குரலும் இணைந்த அந்த திரைப்படம் அவரை முன்னணி நடிகராக உயர்த்தியது. அதன் பிறகு அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் நினைவில் ஆழமாக பதிந்தது. வரலாற்று மன்னர் முதல் சாதாரண குடும்பத் தலைவர் வரை, காதலன் முதல் கோபக்கார மனிதர் வரை, ஏழை முதல் பணக்காரர் வரை எந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டாலும் அதற்குள் முழுமையாக மாறி நடிக்கும் திறமை சிவாஜிக்கு இருந்தது.
வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பாசமலர், தில்லானா மோகனாம்பாள், தெய்வ மகன், தங்கப்பதக்கம், ராஜபார்ட் ரங்கதுரை, முதல் மரியாதை என அவர் நடித்த திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளாக அமைந்தன. குறிப்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் அவரது கம்பீரமான வசன உச்சரிப்பும், முகபாவனையும் இன்றளவும் ரசிகர்களால் பேசப்படுகிறது. தில்லானா மோகனாம்பாளில் நடனக் கலைஞரின் உணர்வுகளை வெளிப்படுத்திய விதமும், பாசமலரில் குடும்ப பாசத்தை வெளிப்படுத்திய விதமும், முதல் மரியாதையில் வயதான மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்திய விதமும் அவரது நடிப்பின் பரந்த எல்லையை காட்டின. ஒரு கதாபாத்திரத்தை நடித்தவர் என்ற எல்லையைத் தாண்டி, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர் என்ற பெயரை சிவாஜி கணேசன் பெற்றார்.
சிவாஜியின் திறமை இந்திய எல்லைகளையும் கடந்து சென்றது. 1960-ஆம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்ற Afro-Asian Film Festival-ல் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார். தொடர்ந்து கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட பல்வேறு கௌரவங்கள் அவரைத் தேடி வந்தன. 1995-ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசு வழங்கிய “கலை மற்றும் இலக்கியத்திற்கான பிரெஞ்சு அரசின் செவாலியே விருது”என்ற கலைக் கௌரவத்தையும் பெற்றார். “தேவர் மகன்” திரைப்படத்திற்காக தேசிய திரைப்பட விருதின் Special Jury Award பெற்ற சிவாஜி கணேசனுக்கு, இந்திய சினிமாவுக்கான மிக உயரிய கௌரவங்களில் ஒன்றான தாதாசாகேப் பால்கே விருதும் வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்திய சினிமாவில் அவர் ஏற்படுத்திய தாக்கம் அதிகாரப்பூர்வமாகவும் அங்கீகரிக்கப்பட்டது.
சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் சிவாஜி கணேசன் தனது தடத்தை பதிக்க முயன்றார். அரசியல் கட்சி தொடங்கி செயல்பட்டதுடன், பின்னர் ராஜ்யசபா உறுப்பினராகவும் பணியாற்றினார். ஆனால் அவரது அரசியல் பயணத்தைவிட, திரைத்துறையில் அவர் உருவாக்கிய வரலாறே மிகப்பெரியதாக அமைந்தது. பல தலைமுறை நடிகர்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணமாக இருந்தார். குறிப்பாக வசனத்தை வெறும் வார்த்தையாக பேசாமல், குரல் ஏற்ற இறக்கம், இடைவெளி, முகபாவனை, கண்களின் அசைவு என ஒவ்வொரு அம்சத்தையும் பயன்படுத்தி நடிப்பை ஒரு கலை வடிவமாக மாற்றியவர் சிவாஜி.
கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்கள் நீண்ட அவரது திரைப்பயணத்தில் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள், எண்ணற்ற கதாபாத்திரங்கள், பல்வேறு விருதுகள் என சாதனைகள் குவிந்தன. ஆனால் 2001-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி, தனது 72-வது வயதில் சிவாஜி கணேசன் மறைந்தபோது, தமிழ் சினிமா ஒரு மிகப்பெரிய சகாப்தத்தை இழந்தது. ஆனால் அவரது மறைவு அவரது புகழுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. அவரது குரல் இன்றும் ரசிகர்களின் காதுகளில் ஒலிக்கிறது; அவரது வசனங்கள் இன்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன; அவரது திரைப்படங்கள் இன்றும் புதிய தலைமுறையினரால் ரசிக்கப்படுகின்றன. 2006-ஆம் ஆண்டு சென்னை காமராஜர் சாலையில் அவரது சிலை நிறுவப்பட்டது. ஒரு நடிகராக தொடங்கி, “நடிகர் திலகம்” என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவின் வரலாற்றில் நிரந்தர இடத்தைப் பிடித்த சிவாஜி கணேசன், மறைந்தாலும் அவரது நடிப்பு மட்டும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் தமிழ் சினிமாவில் ஆயிரம் நடிகர்கள் வந்தாலும், “நடிப்பு என்றால் சிவாஜி… சிவாஜி என்றால் நடிப்பு” என்ற பெயர் மட்டும் தலைமுறைகளை கடந்து தொடர்ந்து ஒலிக்கிறது.
எங்கள் வாழ்க்கை ஏட்டின் எந்த பக்கத்தை புரட்டினாலும பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம் என்ற முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வசனத்திற்கு உயிர் கொடுத்த சிவாஜி அவர்களின் 99 ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளை நம் ஜெம் தொலைக்காட்சி சார்ப்க தெரிவித்துக்கொண்டு விடை பெறுகிறேன்.


