
கரூரில் மின்சாரத் தாக்குதலை அடுத்துக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கரூரில் நேற்றுத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 39 பேர் உயிரிழந்தனர். இந்தத் தகவல் அறிந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலையில் கரூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.
உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்ட நெரிசல் நேர்ந்த அதே இடத்தில் முந்திய நாள் தனது பரப்புரை நடைபெற்றதையும் அதில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
விஜய் கூட்டத்தின்போதும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாததே கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கும் உயிரிழப்பு நேர்ந்ததற்கும் காரணம் என்று குற்றஞ்சாட்டினார்.
மின்சாரத் தாக்குதலால் தான் நெரிசல் ஏற்பட்டதாகத் தனக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறிய பழனிச்சாமி, முழுமையான விசாரணைக்குப் பிறகே காரணம் தெரியவரும் என்றும் குறிப்பிட்டார்.


