
சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சியை காங்கிரஸ் அரசு தடுத்தது என்று பிரதமர் நரேந்திரமோடி குற்றம் சாட்டியுள்ளார்.
சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்டதன் 50-ஆம் ஆண்டு நிறைவு விழாவில், பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். அதன்பின்னர், கேங்டாக் பல்ஜோர் மைதானத்தில் நடைபெற்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் நரேந்திரமோடி, ரூபாய் 4-ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.
அதன் பின்னர் பிரதமர் நரேந்திரமோடி பேசினார். அப்போது, கிழக்கின் சொர்க்கம் சிக்கிம்; எனவும், இந்த மாநிலம் ஆர்க்கிட் மலர்களின் தோட்டம் எனவும், ஆர்க்கிட் மலர்களை காணவில்லை எனில், உண்மையான அழகை நீங்கள் அனுபவிக்கவில்லை என அர்த்தம் என்றும், ஒரு புதிய உணர்வு, மகிழ்ச்சி, எங்கும் நிறைந்திருந்த பண்டிகை சூழலைக் கண்டு நான் வியக்கிறேன் என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
மேலும், சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை, முந்தைய காங்கிரஸ் அரசு புறக்கணித்தது. மாநிலத்தில் வளர்ச்சியை காங்கிரஸ் தடுத்தது என்றும், இன்று பா.ஜ.க. அரசு செய்து வரும் பணிகளை, முன்னரே செய்திருக்க முடியும் என்றும், ஆனால் காங்கிரஸ் அரசு அதை செய்யவில்லை என்றும், உதாரணமாக, சிவோக்-ரங்போ ரெயில் பாதை திட்டம் 2008-2009 ஆம் ஆண்டிலேயே அனுமதி அளிக்கப்பட்டது என்றும், ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான், சிக்கிமில் வளர்ச்சிப் பணிகள் வேகம் எடுத்தன என்றும், இப்போது முதல்முறையாக, சிக்கிம் மாநிலத்திற்கு ரெயில் பாதை அமைய உள்ளது என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.



