
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. மேலும், வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தலுக்கு முன்பாக கடந்த மார்ச் 28 ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து, திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இதில், திமுக 164 தொகுதிகளிலும், காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், தேமுதிக 10 தொகுதிகளிலும், விசிக 8 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 5 தொகுதிகளிலும், மதிமுக 4 தொகுதிகளிலும், இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த தேர்தலில் 60க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மனோ தங்கராஜ், பொன்முடி, ராணிப்பேட்டை காந்தி மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகிய நான்கு முக்கிய திமுக அமைச்சர்களுக்கு இந்த முறை சீட் கொடுக்கப்படவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றிய பேசிய அமைச்சர் காந்தி பாவம் செய்தவர்களுக்கு தான் ஆண் குழந்தை பிறக்கும் என பேசி சர்ச்சையை கிளப்பியிருந்தார். அத்துடன், திமுக பொதுக்கூட்டம் ஒன்றிலும் தகாத வார்த்தைகளில் பேசி வெறுப்பை சம்பாதித்து இருந்தார். அதேபோல், இவருடைய மனைவி ராணிப்பேட்டையில் இருக்கும் லேடீஸ் கிளப் இடத்தை ஆக்கிரமித்து மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி நடத்தி வருவதாகவும் சர்ச்சை எழுந்தது.
அதேபோல், பால்வளத் துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் டிவி நிகழ்ச்சி ஒன்றில், டைடல் பார்க்கில் ஊழல் நடப்பதாக பார்வையாளர்கள் கூறியுள்ளனர். அதற்கு, என்ன ஊழல்? டேய் நாங்கள் விசில் அடிக்கும் காலத்தில் நீங்க நிற்க கூட இல்லடா. உங்க அப்போவோட கோவணத்துக்குள்ள இருந்தீங்கடா என மிகவும் மோசமாக பேசியது முகம் சுழிக்க வைத்தது.
ஒரு அரசு நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய பெண் தலைவரை ஏம்மா நீ எஸ்.சி.தானே என்று மேடையிலேயே கேட்டார். இந்த சர்ச்சை ஓய்வதற்குள், மற்றொரு நிகழ்ச்சி ஒன்றில், பெண்களுக்காக அரசு செய்துள்ள நலத்திட்டங்களைக் குறிப்பிட்டு, 4000 ரூபாய் குடும்ப அட்டைக்கு வாங்கினீங்களா? கோயம்பேடு போக வேண்டும் என்றால் ஓசி பஸ்ஸில் தான் போறீங்க என்று நக்கலாக விமர்சித்தார். இது பெண்கள் மத்தியில் பெரிய சர்ச்சையாக வெடித்தது.
கயல்விழி செல்வராஜை பொறுத்தவரை துறைரீதியில் எந்த பெரிய பிரச்சனையும் இல்லை. அதே சமயம், துறைக்குள் அமைச்சரின் கணவரின் தலையீடு இருப்பதாக பல்வேறு புகார்கள் இருக்கின்றன. இப்படி, பல விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள் இருக்கும்பட்சத்தில் இவர்களுக்கு சீட் கொடுத்தால், வாக்கு விழுமா என்ற சந்தேகத்தின் காரணமாகவே கட்சி தலைமை இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது
அதேசமயம், பொன்முடி மற்றும் ராணிப்பேட்டை காந்தி இருவரும் பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வெறுப்பை சம்பாதித்து இருந்தாலும், ஒரு காலத்தில் திமுக கட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் நிறைய உழைத்திருக்கிறார்கள். அதை மனதில் வைத்தே, அமைச்சர் காந்தியின் ராணிப்பேட்டை தொகுதியில் அவருடைய மகன் வினோத் காந்திக்கும், திருக்கோவிலூர் தொகுதியில் பொன்முடிக்கு பதிலாக, அவருடைய மகன் பொன்.கௌதமசிகாமணிக்கு சீட் வழங்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.



