
சூரபத்மனை வதம் செய்யச் சக்தி தேவியிடம் முருக பெருமான் வேல் வாங்கிய இடம்!
இந்தக் கோவில் தமிழகத்தில் நாகபட்டிணம் அருகே சிக்கல் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து 18 கி.மீத்தொலைவிலும், நாகபட்டிணத்திலிருந்து மேற்கே 5 கி.மீத்தொலைவிலும் அமைந்துள்ளது. சிக்கல் நவனீதஸ்வரர் கோவில் என்பது இதன் மூல பெயர். அதில் சிங்காரவேலன் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. விண்ணுலகத்தில் இருக்க கூடிய காமதேனு பசு ஒருமுறை பஞ்சம் காரணமாக மாமிசம் உண்டுவிட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த சிவபெருமான் அந்தப் பசுவிற்கு சாபம் வழங்கினார். சாபத்தினால் மிகவும் கவலையுற்ற காமதேனு, இறைவனிடம் இறைஞ்சி சாப விமோசனம் கோரினார். மனம் இறங்கிய சிவபெருமான் பூலோகத்தில் மல்லிகை வனம் உண்டு அங்குள்ள தலத்தில் நீராடி அங்குள்ள இறைவனை வணங்கினால் சாபம் நீங்கும் என அருளினார்.
அதன்படியே இன்றைய கோவில் அமையப்பெற்றுள்ள இடத்தில் உள்ள குளத்தில் நீராடிச் சாப விமோசனம் பெற்றார் காமதேனு. அதன் பொருட்டு காமதேனு பசுவின் மடியில் பெருகிய பால் பாற்குளத்தை உருவாக்கியது. அதுவே இன்றும் புனிதகுளமாகக் கருதப்படுகிறது. வசிஸ்ட மாமுனி, அந்தப் பாலிலிருந்து கிடைத்த வெண்ணையை கொண்டு அங்கேயே சிவலிங்கம் வடித்து வழிபட்டார். தன்னுடைய பூஜை முடிந்த பின்பாக அந்தச் சிவலிங்கத்தை அவர் எடுக்க முற்பட்டபோது அது சிக்கி கொண்டு வர மறுத்தது அதன் பொருட்டே இந்த ஊருக்குச் சிக்கல் எனப் பெயர் வந்தது என்பது நம்பிக்கை.

சமயக் குரவர்களால் பாடல்பெற்ற பழைமைவாய்ந்த இக்கோயிலில் சிங்காரவேலவர் வீற்றிருக்கும் சந்நிதி தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இந்தத் தலத்தில் எழுந்தருளும் சிங்காரவேலவர், அன்னை வேல்நெடுங்கன்னியிடம் வேல் வாங்கிக்கொண்டு திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாகக் கந்தபுராணம் கூறுகிறது.
இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழாவின்போது அன்னையிடமிருந்து வேல்வாங்கும் வைபவம் நடைபெறுகிறது. இங்கிருக்கும் முருக பெருமானிடம் ஒரு அதிசயம் நிகழ்வதுண்டு. அதாவது சுரபத்மனை வதைக்க இந்த இடத்தில் தான் முருக பெருமான் சக்தி தேவியிடம் வேல் வாங்கினார் என்கிறது புராணம்.

இந்தக் கிராமத்தில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் வெண்ணெயால் சிவலிங்க உருவம் அமைத்துப் பூஜித்தார். பூஜை முடிவில் சிவலிங்கம் எடுக்க முடியாமல் சிக்கிய காரணத்தால் இந்த ஊர் சிக்கல் என்று பெயர் பெற்றது.இந்தக் கோயிலில் முருகப் பெருமான் அம்மை அப்பருக்கு நடுவில் வீற்றிருந்து அருள்புரிகிறார். அதனால், சிங்காரவேலர் குழந்தைவரம் அருள்பவராக வீற்றிருக்கிறார். சிக்கல் சிங்காரவேலரைத் தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.


