
கார்த்திகை மாதம் பிறந்துள்ளதை முன்னிட்டு மண்டல பூஜை விழாவிற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு மண்டல பூஜைகள் நடந்து வருகிறது.
கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ளது சபரிமலை. பிரம்மச்சாரியாக தவக்கோலத்தில் தரிசனம் தரும் ஐயப்பனை தரிசனம் செய்த பல நாட்கள் கடுமையான விரதம் இருந்து வந்து காடு மேடு கடந்து மலையேறி பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.
மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அங்கு, வரும் 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ள நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் நேற்றைய தினமும் சன்னிதானத்தில் பக்தர்கள் சுமார் 6 முதல் 8 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சபரிமலைக்கு வரும் சிறுவர்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மண்டல பூஜை காலம் இன்று முதல் டிசம்பர் 27 வரை நடைபெறும். டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜைக்குப் பிறகு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்படும். மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும். ஜனவரி 15ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும். ஜனவரி 20ஆம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்.

