Shi Yan 6: சீன கப்பலால் இந்தியா அதிர்ச்சி!

கொழும்புவில் சீன கப்பலால் இந்தியா அதிர்ச்சி!

கொழும்பு: இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் குறித்து இந்தியா ஏற்கனவே கவலை தெரிவித்துள்ள நிலையில், கொழும்புவில் நேற்று சீன ஆராய்ச்சி கப்பல் ஒன்று நிலைநிறுத்தப்பட்டு இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை பல்வேறு வழிகளில் சீனா உளவு பார்ப்பதாக ஒன்றிய அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. கடந்த ஆண்டு சீனாவின் போர் கப்பல் ஒன்று இலங்கையில் நங்கூரம் விடப்பட்டதற்கும் இந்தியா எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு ஷியான் 6 என்ற சீன ஆராய்ச்சி கப்பல் நேற்று வந்து சேர்ந்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு ஷி யான் 6 கப்பலை கொழும்புவில் நிறுத்த இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த சீன கப்பல் இலங்கை அரசின் கடல்சார் நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளும் என்ற செய்திகள் வெளியான நிலையில், எரிபொருள் நிரப்ப மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது ஷி -யான் 6 உளவு கப்பல் இல்லை என்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியை புவியியல் ஆய்வு செய்யும் ஒரு ஆராய்ச்சி கப்பல் மட்டுமே என்று சீனா கூறினாலும் கப்பலின் நடமாட்டம் குறித்து ஒன்றிய அரசு கண்காணித்து வருகிறது.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் சீனா, இதற்காக இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருவதாக ஒன்றிய அரசு குற்றம் சாட்டி உள்ளது. கடந்த 20ம் தேதி சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை இலங்கை அதிபர் ரணில் பெய்ஜிங்கில் சந்தித்து பேசிய 5 நாளில் நேற்று இலங்கையில் சீன ஆராய்ச்சி கப்பல் நங்கூரமிட்டு இருப்பது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *