Devarayambalayam: சாப்பிட சென்ற வாலிபரை  தலையில் கல்லைப்போட்டு கொன்ற கும்பல்!

Advertisements

திருமண நிகழ்ச்சியில் சாப்பிட சென்ற வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவினாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தேவராயம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்த வாலிபரின் தலையில் பலத்த காயம் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் கொலை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரை கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபர் அவிநாசி பகுதியில் சுற்றி திரிந்து வந்ததுடன், பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்துள்ளார். மேலும் அவிநாசி பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் சாப்பிட செல்வது வழக்கம்.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் இறந்து கிடந்த திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபர், நேற்று அந்த திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சாப்பிட சென்றதும், அப்போது அங்கு ஒரு பெண், 2 வாலிபர்கள் தட்டிக்கேட்கவே, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதும், பின்னர் 3பேரும் சேர்ந்து வாலிபரை அங்கிருந்து வெளியேற்றியதும் தெரியவந்தது. இந்த தகராறு காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

எனவே இந்த பிரச்சனையில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக வாலிபர்கள் 2பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சியில் சாப்பிட சென்ற வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவினாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *