இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள சக்தி எஞ்சின், தேசியப் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றுவதாகவும், நமது பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இலகு வகை தேஜஸ் விமானங்களைத் தயாரித்துள்ளது. இந்த விமானங்களை இயக்குவதற்கான சான்றுகளை வழங்கி விமானங்களை இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கும் விழா நேற்று நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் ஆகியோர் முன்னிலையில் தேஜஸ் விமானங்கள் விமானப்படையிடமும், துருவ் ஹெலிகாப்டர்கள் பவன்ஹன்ஸ் நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்பட்டன.
விழாவில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் விமானப்படைக்கும் இலகு வகைத் தேஜஸ் விமானங்களைச் செய்து கொடுத்துள்ளதாகவும், ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குக் கடலில் உள்ள எண்ணெய்க் கிணறுகளுக்குச் செல்லும் வகையில் ஹெலிகாப்டர்களைச் செய்து கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இது ஒரு சாதாரணச் சாதனையல்ல என்றும் மிகப்பெரிய சாதனை என்றும் குறிப்பிட்டார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சக்தி எஞ்சின் நமது விமானத் தயாரிப்புத் திறனை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், தேசியப் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றுவதாகவும், நமது பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் ஒற்றையாளாகப் பணியாற்றி மாபெரும் விந்தைகளைச் செய்ய முடியும் என்று தெரிவித்தார். புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நமது இளம் அறிவியலாளர்கள், பொறியாளர்கள், வடிவமைப்பாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இப்போது எங்கும் இல்லாத புதிய தொழில்நுட்பங்களை நமது அறிவியலாளர்கள் உருவாக்குவார்கள் என்று ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.




