Settiyapatti accident: 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

Advertisements

திருச்சியில் 5 பஸ்கள் உள்பட 7 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில்37 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருச்சி: சென்னையில் இருந்து சாயல்குடி நோக்கி ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை விருதுநகரை சேர்ந்த மாரிசாமி ஓட்டினார். பஸ் இன்று அதிகாலை 3 மணி அளவில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பஞ்சப்பூர் அடுத்த செட்டியாபட்டி, கோரையாற்று பாலம் அருகே வந்தது.

அப்போது பின்னால் ஒரு டாரஸ் லாரி வந்தது. பஸ்சும், லாரியும் ஒன்றுக்கொன்று முந்தி செல்ல முயன்றன. இதில் தனியார் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து செட்டியாபட்டி, கோரையாற்று பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது அந்த பஸ்சை பின் தொடர்ந்து வந்த 2 தனியார் பஸ்களும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதின. இதனால் பஸ்களில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.இதையடுத்து விபத்துக்குள்ளான பஸ்களின் டிரைவர்கள் இறங்கி நின்று ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற இன்னொரு லாரி விபத்துக்குள்ளாகி நின்ற மூன்றாவது பஸ்சின் பின்பக்கம் மோதியது. அதன் தொடர்ச்சியாக இந்த விபத்துக்கள் குறித்து அறியாத மேலும் இரண்டு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து மோதின. பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளது.

ஒன்றன்பின் ஒன்றாக வந்த 5 பஸ்களும், ஒரு லாரியும் அடுத்தடுத்து மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு உண்டானது. இந்த விபத்தில் 2 டிரைவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் என 7 பேருக்கு தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பயணிகள் 30-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிகாலை வேளையில் போக்குவரத்து அதிகமாக இருந்ததால் வாகனங்கள் அனைத்து நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த எடமலைப்பட்டி புதூர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர்.இதுபற்றி எடமலைப்பட்டி புதூர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *