
என்.சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் மறுப்பு” – ஏன் ?
என். சங்கரய்யா அவர்கள் 1922- ல் ஆகஸ்டு 15- ஆம் தேதி பிறந்தார். இவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. ஒரு நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரரும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் 15 ஆவது மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும் ஆவார். மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும் அரும் பணியாற்றியவர்.
இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்த பின் இடைநிலை படிப்பிற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1937 ஆம் ஆண்டில் சேர்ந்தார். வரலாறு பிரதான பாடமாகும். அமெரிக்கன் கல்லூரியின் பரிமேலழகர் தமிழ்க் கழகத்தின் இணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1938 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் சென்னை மாணவர் சங்கம் அமைக்கப்பட்டு சுதந்திரப் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல் மதுரையிலும் மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டது. 1957 & 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல்களில் இவர் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி இழந்தார். 1967ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சங்கரய்யா, மதுரை மேற்குத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். இவர் 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார். 1982 முதல் 1991 வரை விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
1986 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநாட்டில் கட்சியின் இவர் மத்திய குழுவிற்கு தேர்வுசெய்யப்பட்டார். அப்போதிலிருந்து தொடர்ந்து மத்திய குழுவில் இருந்து வருகிறார். 1995 இல் கடலூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், என்.சங்கரய்யா கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார்.
சென்னையில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் தேதி அன்று நடைபெற்ற இந்திய விடுதலை நாள் விழாவில் தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது, முதல் முறையாக சங்கரய்யாவுக்கு வழங்கப்படும் என ஜூலை28 -ஆம்தேதி அறிவித்து சுதந்திர தினத்தன்று ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. அந்த 10 லட்ச ரூபாயை முதல்வரின் கோவிட்-19 பேரிடர் நிவாரண நிதிக்காக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரப் போராட்ட வீரரும், முதுபெரும் அரசியல் தலைவருமான அய்யா என்.சங்கரய்யா அவர்களுக்கு, மதுரை காமராசர் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் வழங்க முடிவு செய்திருந்த கோப்பில், ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட மறுத்த செய்தி கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
தமிழ்நாடு அரசும் இதனை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு எதிராக நடந்து கொள்வது மன்னிக்க முடியாத மாபெரும் தவறு ஆகும். சூதாட்டத்திற்கு எதிராகவும், தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளையும், அரசின் முற்போக்கான திட்டங்களையும் முட்டுக்கட்டை போட்டு தடுத்து நிறுத்தி, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக சட்ட விரோதமாக செயல்படும் ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பிலிருந்து அகற்ற வேண்டும் என்ற அரை கோடி தமிழர்கள் விருப்பத்தை குடியரசுத் தவைரிடம் முறையிட்டுள்ளது மறுமலர்ச்சி தி.மு.க.
விடுதலை வீரரான என்.சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து பல்வேறு கட்சியினரும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவரது கண்டனங்களை தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் அனைவரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.
ஆனால் ஆளுநர் தரப்பில், கோப்பில் சுதந்திர போராட்டத்தில் அவரது பங்களிப்பு குறித்த தரவுகள் எதுவும் தரப்படவில்லை சமீபத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். அதில் பலர் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு, சிலர் நடக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பெயரளவில் வாய்மொழியாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆளுநர் கோப்பில் கையெழுத்திடவில்லை என்றும் கல்வியில் அரசியலைப் புகுத்த வேண்டாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஆளுநர் தரப்பு பதில் அளித்துள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் கூட டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


