
கரூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற 975 மாணாக்கர்களுக்கு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் கலை திறனை மேம்படுத்தும் விதமாக, மாவட்ட அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் ஆயிரத்து 703-மாணாக்கர்கள் பங்கேற்றனர்.
போட்டியில், 975 மாணவர்கள் வெற்றிப்பெற்றனர். வெற்றிப் பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, கரூர் காந்திகிராமம் பகுதியில் செயல்படும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜு உள்ளிட்ட இரு பால் ஆசிரியர்கள், மாணாக்கர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
அதன் பின்னர், வெற்றிப் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பரிசுகளைப் பெற்றுக் கொண்ட மாணாக்கர்கள், தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில்-பாலாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.



