அதிர்ச்சியில் மிட்டாய் பிரியர்கள்..!

Advertisements

நிலக்கடலை விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் கோவில்பட்டி கடலை மிட்டாய் விலையை 40 சதவீதம் உயர்த்துவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

கடலை மிட்டாய் என்றாலே அது கோவில்பட்டி தான். சந்தையில் கோவில்பட்டி கடலை மிட்டாய் என்றால் தனி மதிப்பு உண்டு. அதிலும் புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்ற பின்னர், வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு, கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை அதிகரித்துள்ளது. கோவில்பட்டியில் உள்ள தொழிலாளர்களில் குறிப்பாகப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது.

கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் 120 கடலை மிட்டாய் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடலை மிட்டாய்க்கு முதன்மையான மூலப்பொருளான நிலக்கடலையின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 80 கிலோ எடை கொண்ட நிலக்கடலை மூட்டை எட்டாயிரம் ரூபாயாக இருந்த நிலையில், இப்போது ரூபாய் 14 ஆயிரத்து 500-ஆக உயர்ந்துள்ளது. இதனால் கடலை மிட்டாய் உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், கடலை மிட்டாய் விலையை 40 சதவீதம் உயர்த்த தீர்மானிக்கப்பட்டது. மேலும். இந்த விலை உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *