செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Advertisements

டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய திமுக ஆட்சியில், டாஸ்மாக் மதுபான கொள்முதல், பார்களுக்கான டெண்டர் விட்டதில் முறைகேடு, சட்டவிரோதமாக பார் நடத்தியது, டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ஜூலை 28-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது.

திமுக ஆட்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவரும், தற்போதைய கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வி.செந்தில் பாலாஜி, டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன் ஐ.ஏ.எஸ், முன்னாள் மண்டல மேலாளர்கள் டி.ராமதுரைமுருகன், ஆர்.பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் ரத்தேஷ்ராஜ், செந்தில் பாலாஜியின் முன்னாள் நேர்முக உதவியாளர் பாஸ்கர், முலனூர் எஸ்.கார்த்திக் ஆகிய 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அந்த வழக்கில், ஆண்டுதோறும் மதுபானங்கள் விற்பனை வாயிலாக, அரசுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரித்த போதிலும், பார்கள் நடத்த டெண்டர் விடுதல் உள்ளிட்ட பணிகளில் வருவாய் குறைவாக வந்ததாகவே கணக்கு காட்டப்பட்டுள்ளது. கடந்த 2021-ல் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில், 857 டாஸ்மாக் பார்கள் நடத்த டெண்டர் கோரப்பட்டது.

இதில், முறைகேடு நடந்துள்ளது. டெண்டரில் பங்கேற்றவர்கள், ஒரே வங்கியில் இருந்து தொடர்ச்சியான எண்களில், டி.டி. எடுத்து முன்பணம் வைப்புத்தொகை செலுத்தி உள்ளனர். இதனால், கூட்டு சதி நடந்து இருப்பது அம்பலமாகிறது. மாநிலத்தில், 857 டாஸ்மாக் பார்களில், 284 மூடப்பட்டு விட்டதாக, ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், இந்த பார்கள் உரிமம் புதுக்கப்படாமல், தொடர்ந்து சட்டவிரோதமாக செயல்பட்டு வந்துள்ளன.

இதனால், 2022-2023-ஆம் ஆண்டில், கோவை வடக்கில், 17.27 கோடி ரூபாய், கோவை தெற்கில் 13.58 கோடி ரூபாய், நீலகிரியில் 1.95 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. 45 கிடங்குகளுக்கான போக்குவரத்து டெண்டர் நடைமுறையில் முறைகேடு நடந்துள்ளது. பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சேகரித்து, மதுபான ஆலைகளுக்கு வழங்குவதில் 143 கோடி ரூபாய் முறைகேடாக கையாளப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 28-ம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ‘கோவை, கரூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் பார் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குறிப்பிட்டு எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுக்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளது. டாஸ்மாக் அதிகாரிகள் செய்த குற்றத்துக்கு செந்தில் பாலாஜிக்கு எந்த தொடர்பும் சம்பந்தம் இல்லை’ என வாதிட்டார்.

முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட விபரங்களை நீதிமன்றத்தில் வாசித்த வழக்கறிஞர் இளங்கோ, ‘ஒதுக்கீடு பெற்றவர்கள் ஒரு வங்கியில் இருந்து வைப்பு தொகை செலுத்தியதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறை குற்றஞ்சாட்டியுள்ளானர். ஆனால், இதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. அரசியல் காரணங்களால் இந்த வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது’ என தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன், ‘வழக்கு ஆவணங்கள் இன்று காலைதான் தனக்கு கிடைத்துள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும். செந்தில் பாலாஜியின் அறிவுறுத்தல்படி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் செயல்பட்டுள்ளனர். புலன் விசாரணை தற்போது ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது.

குறைந்தது 100 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. எனவே, விரிவான விசாரணை நடத்த வேண்டும். தற்போதைய நிலையில் இந்த மனு மீது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது’ என வாதிட்டார்.இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி இளந்திரையன், தற்போதைய நிலையில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்ற லஞ்ச ஒழிப்பு துறை வாதத்தை ஏற்பதாக தெரிவித்தார்.

முறைகேடு நடந்துள்ளதற்கும், இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆரம்ப கட்ட ஆதாரங்கள் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாந்திரம் உள்ளது. எனவே, குற்றஞ்சாட்டப்பட்ட மனுதரார் காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளது என்ற காவல் துறை வாதத்தை ஏற்று முன்ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *