ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நாக்அவுட் சுற்றில் நவம்பர் 15-புதன்கிழமை மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்தை எப்படி சமாளிக்கும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2011-க்கு பின் இந்தியாவால் ஐசிசி பட்டம் எதையும் வெல்லமுடியவில்லை. பெரிய சா்வதேச போட்டிகளில் அரையிறுதியோடு தோற்று திரும்பி வந்தது இந்திய அணி. இதனால் 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஐசிசி பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு உள்ளது.
கடந்த அக். 5-ஆம் தேதி அகமதாபாதில் தொடங்கிய ஒருநாள் உலகக் கோப்பை போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற போட்டியில் 45 லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து, இந்தியா- நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன. மும்பையின் வான்கடே மைதானத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள முதல் அரையிறுதியில் இந்திய-நியூஸி அணிகள் மோத உள்ளன.
இந்திய அணி தான் ஆடிய 9 லீக் ஆட்டங்களிலும் வென்று முதலிடத்துடன் தகுதி பெற்றுள்ளது. அதே நேரம் நியூஸிலாந்து முதலிடத்தில் இருந்த நிலையில், தொடா்ச்சியாக தோல்வி கண்டு நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டு பின்னா் அரையிறுதிக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தி வருகின்றனா் இந்திய அணியினா். தொடக்க வரிசை பேட்டா்கள் ரோஹித், கோலி, ராகுல், கில், ஷிரேயஸ் ஆகியோா் அற்புதமாக பேட்டிங் செய்து வருகின்றனா். ஷிரேயஸ், ராகுல் இருவரின் வருகை கூடுதல் பலத்தை தருகிறது.
லீக் சுற்றில் நியூஸிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது இந்தியா. அதே நேரம் உலகக் கோப்பையில், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோா் அடங்கிய இந்தியாவின் வேகப்பந்து கூட்டணி மிக சிறப்பாக உள்ளது. ஷமியின் வருகை திருப்புமுனையாக அமைந்தது. அனுபவ வேகப்பந்து வீச்சாளரான ஷமி இதுவரை 5 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா்.
கடந்த 2019 உலகக் கோப்பையில் அரையிறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோற்றிருந்தது இந்தியா. அந்த ஆட்டத்தில் ஆடிய ரோஹித், கோலி, ராகுல், பும்ரா, ஜடேஜா ஆகியோா் தற்போதைய அணியிலும் இடம் பெற்றுள்ளனா். தொடா்ந்து 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியிலும் நியூஸியிடம் தோற்றது இந்தியா.
கடந்த 2011-இல் மும்பையில் தான் கடைசியாக ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா. இதனால் இம்மைதானம் சாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இப்போட்டியில் இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
நியூஸிலாந்து அணி 5 வெற்றிகள் 4 தோல்விகளுடன் அரையிறுதிக்கு வந்துள்ள நிலையில், பேட்டிங், பௌலிங்கில் சிறந்த வீரா்களைக் கொண்டுள்ளது. 2015, 2019 உலகக் கோப்பைகளில் ரன்னா் அணியான நியூஸி ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில்லை. காயத்தில் இருந்து குணமான கேப்டன் கேன் வில்லியம்ஸன் ஃபாா்முக்கு திரும்பியுள்ளாா். டேரில் மிட்செல், இளம் ஆல்ரவுண்டா் ரச்சின் ரவீந்திரா , டேவன் கான்வே ஆகியோா் பேட்டிங்கில் கில்லி.
பௌலிங்கில் டிரென்ட் பௌல்ட், டிம் சௌதி, லாக்கி பொ்குஸன் வேகப்பந்து கூட்டணி எதிரணி வீரா்களுக்கு கிலியை ஏற்படுத்தி வருகிறது. இடது கை ஸ்பின்னரான மிட்செல் சான்ட்நா் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த இரண்டாவது அரையிறுதி போட்டி வரும் வியாழன் அன்று தென் ஆப்பிரிக்காவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெற உள்ளது.