senthil balaji:அதிரடி காட்டும் செந்தில் பாலாஜி!..மின்னகத்தில் இன்று திடீர் ஆய்வு!

Advertisements

அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி செய்த விவகாரம் தொடர்பாகக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் மீண்டும் தற்போது அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கி வரும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள்குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர் மின்தடை ஏற்படும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தைக் கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் மற்றும் தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் மின்சாரத் தேவை மற்றும் மின் விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை என்றும், மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எடுத்துள்ளதாகவும், மின் விநியோகம் சார்ந்த குறைபாடுகளைச் சரி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி சேவை மின்னகத்தை 94987 94987-ல் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *