”ஈ.வெ.ரா சிலையை பொது இடத்தில் வைத்து போற்றி கொள்ளட்டும். கோயில் முன் வைக்க கூடாது” என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை: தி.நகரில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: பொது இடத்தில் ஈ.வெ.ரா கருத்துக்கள் இருக்கலாம். கோயில் முன் ஈ.வெ.ரா சிலை இருக்க கூடாது. ஸ்ரீரங்கம் கோயில் முன் உள்ள ஈ.வெ.ரா. சிலையை வேறு இடத்தில் வைப்பதே பாஜ.,வின் தேர்தல் வாக்குறுதி. ஈ.வெ.ரா., திமுகவையும், காங்கிரசையும் பற்றி கூறிய கருத்துக்களை அந்த கட்சி அலுவலகங்கள் முன் வைக்க முடியுமா?.
தமிழகத்தில் லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது. அறநிலையத்துறையை எதிர்ப்பதற்கான காரணம் என்னிடம் உள்ளது. ஹிந்து அறநிலையத் துறை இருக்கக்கூடாது என்பது தான் பாஜ.,வின் நிலைப்பாடு. அதை பாஜ., செயல்படுத்தும். ரூ.5,344 கோடி மதிப்பிலான கோயில் சொத்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார்.
எத்தனை சொத்துக்கள் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் மீட்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவோடு கட்டாயமாக மீட்க வேண்டும் என்ற நிலை உருவாகி வந்த போது தான் மீட்டுள்ளார்கள். ஹிந்து அறநிலையத்துறை ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது.
என் மண் என் மக்கள் யாத்திரை 103 தொகுதிகளை கடந்துள்ளது. யாத்திரை நிறைவு நாளில் பிரதமர் மோடி தமிழகம் வர வாய்ப்புள்ளது. பெரிய அனுபவம், பெரிய எழுச்சி, சாதாரண மக்கள் அனைத்து இடங்களிலும் பங்கேற்று ஆதரவு அளித்து வருகின்றனர். 2026 சட்டசபை தேர்தலில் வெற்றிக்காக பா.ஜ., கொக்குபோல் காத்திருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.