அமைச்சருக்குக் கீழ்… ஆணையருக்கு மேல்…யார் யாருக்கு என்ன பதவி..?

Advertisements
“தலைவரே, எம்.எல்.ஏ சீட் தான் கிடைக்கல, அட்லீஸ்ட் அந்த வாரியத் தலைவர் பதவியையாவது கொஞ்சம் பாத்து பண்ணுங்க…” அப்படின்னு தேர்தல் முடிவுகள் வந்தாலே, ஆளுங்கட்சித் தலைமையிடம் நிர்வாகிகள் வைக்கும் இந்த கோரிக்கையை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். சமீபத்தில்கூட, முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் பதவி, கு.ப.கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால், இந்த வாரியத் தலைவர் பதவிக்கு பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்குகள் என்ன? ஏன் இந்தப் பதவிகள் இவ்வளவு முக்கியமாகக் கருதப்படுகிறது? வாரியத் தலைவர் பதவி என்றால் என்ன? என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம். தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள இந்த வாரியத் தலைவர் பதவிகளை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கே உண்டு.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தப் பதவிகளுக்கு வயது அல்லது கல்வித் தகுதி என எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. அந்தத் துறை சார்ந்த அனுபவம் கூட கட்டாயமில்லை. அமைச்சருக்குக் கீழ், ஆணையருக்கு மேல் அதிகார மையமாக இது செயல்படுகிறது.
இந்த வாரியத் தலைவர் பதவியில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம் ? வாரியத் தலைவராக நியமிக்கப்படுபவருக்கு அரசு கார், சுமார் 2 லட்சம் ரூபாய் சம்பளம், பயணப்படியுடன் கூடிய அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் வசதி எனப் பல சலுகைகள் உண்டு. மிக முக்கியமாக, பச்சை நிற மையால் கையெழுத்திடும் அதிகாரம் இவர்களுக்கு உண்டு.
அமைச்சர்களை எளிதில் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதால், பலரும் இந்தப் பதவியைப் பிடிக்கத் தீவிரமாக காய் நகர்த்துகின்றனர். இப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில், விஜய்யுடன் நீண்ட காலம் பயணித்த பலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை; சிலர் தியாகம் செய்தும் உள்ளனர்.
இவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வாரியத் தலைவர் பதவிகளைப் பயன்படுத்த முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது வஃக்பு வாரியத் தலைவராக உள்ள ஐ.யூ.எம்.எல் நவாஸ் கனி, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதே பதவியில் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், த.வெ.க.வில் வி.எஸ். பாபு, பூக்கடை குமார், சிவா, அப்புனு, நாஞ்சில் சம்பத், லயோலா மணி மற்றும் ஊடகவியலாளர் ஃபெலிக்ஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் இந்தப் பதவிக்கான பட்டியலில் அடிபடுகின்றன. ஆட்சி மாற்றத்திற்குப் பின் கூட்டணி நெருக்கடி, நிதிப் பற்றாக்குறை எனச் சூழல் சற்று சவாலாகவே இருப்பதால், இந்த வாரியத் தலைவர் நியமனங்கள் த.வெ.க. அரசுக்கு எந்த அளவுக்குக் கைகொடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.”
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *