
அதிமுகவின் மூத்ததலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் வி.கே. சசிகலாவை சந்தித்துள்ள சம்பவம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பழனிசாமி மீது ஆறு மாதத்திற்கு மேலாகவே செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்து வருவதாக சொல்லப்படும் நிலையில் வரும் 5ஆம் தேதி மனம் திறந்து பேசுவேன் எனக் கூறி அதிர வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள்தான் செங்கோட்டையனின் கோபம் மீண்டும் அதிகரிக்கக் காரணம் என்கின்றனர் அதிமுகவினர். அதிமுக என்றாலே அனுதினமும் ஏதாவது ஒரு பிரச்சனை என்ற ரீதியில்தான் தற்போது இருக்கிறது. ஜெயலலிதா இருந்தவரை ராணுவக் கட்டுப்பாட்டோடு இருந்த இயக்கம் அவரின் மறைவுக்குப் பிறகு பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து 4 அணிகளாக பிறந்து செயல்பட்டுவருகிறது.
2011 தேர்தலைத் தொடர்ந்து 2016 தேர்தலிலும் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த ஜெயலலிதா திடீரென உடல்நலக்குறைவால் காலமானார். அதற்குப் பிறகு அதிமுகவில் அரங்கேறியது எல்லாம் திரைப்படத்தில் வருவதைவிட அதிரடியான காட்சிகள் தான் என்றே சொல்லலாம். குறிப்பாக ஓபிஎஸ் முதல்வரானது, ராஜினாமா செய்தது, சசிகலா சிறைக்குச் சென்றது, எடப்பாடி முதல்வரானது என அடுத்தடுத்து பல்வேறு அதிரடிகள் அரங்கேறின.
இறுதியாக ஆட்சியை காப்பாற்ற ஓபிஎஸ் ஆதரவு தேவை என்ற நிலையில் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை வெளியேற்றினார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சி முடிந்ததும் பன்னீர்செல்வத்தையும் கழற்றிவிட்டார். 2024இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. ஏற்கனவே கூட்டணியில் இருந்த பாஜக சில தொகுதிகளில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.
2026 தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி மீண்டும் அமைந்திருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு சில சீனியர்கள் நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும், அப்போதுதான் 2026 தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்நிலையில் அதிமுக மூத்தவர்களில் ஒருவரான செங்கோட்டையன் மீண்டும் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்.
செப்டம்பர் 5ஆம் தேதி வெளிப்படையாக மனதில் உள்ளவற்றை பேசுவேன் என அதிர வைத்திருக்கிறார். இதனிடையே அதிமுகவின் மூத்ததலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் வி.கே. சசிகலாவை சந்தித்துள்ள சம்பவம் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
ஆனால் மேடையில் அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டாராம். மேலும் கடைசி வரை ‘நல்லா இருக்கீங்களா’ எனப் பெயருக்குக் கூட கேட்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. திட்டமிட்டே தன்னை எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பதால் கோபத்தோடு கூட்டத்திலிருந்து வெளியேறினாராம் செங்கோட்டையன். அதன் விளைவாகவே தற்போது தனது சொந்த ஊரில் ஆதரவாளர்களைக் கூட்டி ஆலோசனை நடத்தியதோடு எடப்பாடி பழனிசாமிக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறார் என்கின்றனர்.
அதிமுகவிலிருந்து வி. கெ. சசிகலாவை நீக்கிய பிறகு சசிகலாவுடன் செங்கோட்டையன் சந்தித்துபேசியதால் செங்கோட்டையன் மீது எடப்படிபழனிசாமி அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.


