செங்கோட்டையன் அதிரடி நீக்கம்.. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்கள்.!

Advertisements
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு மரணமடைந்த பிறகு  அதிமுகவில் தலைமைப் பொறுப்புகள் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டது.  அப்போது கட்சியின் முக்கிய தலைவராக வி.கே. சசிகலா பொதுச்செயலாளராகவும், டி.டி. தினகரன் துணைப் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் நிர்வாகமும் அரசியல் தலைமைத்துவமும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒருங்கிணைந்தது. இதனைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு, அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த கே.சி. பழனிசாமி, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய பாஜக அரசை விமர்சித்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி மற்றொரு செய்தித் தொடர்பாளர் புகழேந்தியும் நீக்கப்பட்டார்.
இதற்கிடையில், அதிமுகவில் “ஒற்றை தலைமை” விவகாரம் மீண்டும் விஷ்வரூபம் எடுத்தது.
கட்சியின், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அணிகளுக்கிடையே ஏற்பட்ட அதிகாரப் பிரச்சினை, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் வெளிப்படையாக வெடித்தது.
அந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என கோஷங்கள் எழுந்தன. பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், ஜெ.சி.டி. பிரபாகர், பி.எ. மனோஜ் பாண்டியன் ஆகியோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் தலைமை மாற்றத்துக்குப் பிறகு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைகள் வேகமெடுத்தன. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற உடனே, ஓபிஎஸ்ஸின் மகன் மற்றும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ. பி. ரவீந்திரநாத், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மருது அழகு ராஜ் ஆகியோர் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

அதிமுகவின் அடிப்படைக் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாகக் கூறி, இந்த நீக்கத்தை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நடவடிக்கை, ஓபிஎஸ் தரப்பின் கட்சி செல்வாக்கைக் குறைக்கும் முக்கியமான நடவடிக்கையாக கருதப்பட்டது. ஓ. பன்னீர்செல்வத்துடன் நெருங்கிய உறவு வைத்திருந்த முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததற்காகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அதே காரணத்தால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். அன்வர் ராஜாவும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இந்நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, தற்போது கட்சியின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையனும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.காரணம் ஓபிஎஸ், தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் தேவர் ஜெயந்தியின் போது கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவின் மூத்த நிர்வாகி.. எம்.ஜி ஆர் காலத்து தலைவர்.. ஜெயலலிதாவின் விசுவாசியான இந்த செங்கோட்டையன் அக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து  எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியதில் இருந்தே செல்வாக்காக வலம் வந்த செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகியவர்கள், நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தி வந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம். பசும்பொன்னில் டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்தார்.
இதையடுத்து, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன். திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய செங்கோட்டையன், 1972ஆம் ஆண்டு திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்ட பிறகு எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுகவில் இணைந்தார்.
எம்.ஜி.ஆரின் குட்புக்கில் இடம்பெற்ற செங்கோட்டையன், 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக  வெற்றி பெற்றார். அதன்பிறகு, 1980-ஆம் ஆண்டு முதலே கோபிசெட்டிப்பாளையத்தில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றியை பெற்றுள்ளார். பல்வேறு துறைகளில் அமைச்சர் பதவிகளை வகித்த இவர்  எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்  1989 ஆம் ஆண்டில் அதிமுக ஜெயலலிதா அணி..  அதிமுக ஜானகி அணி என்று இரண்டாக பிளவுபட்டபோது, ஜெயலலிதா அணியில் இருந்த செங்கோட்டையன் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1996 தேர்தலில் மட்டும்  செங்கோட்டையன் தோல்வியை தழுவியுள்ளார். அதன்பிறகு அடுத்த அனைத்து தேர்தல்களிலும் செங்கோட்டையன் வெற்றியே பெற்றுள்ளார்.  கடந்த 1991 – 1996 ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், 2011 – 2016 ஆட்சிக் காலத்தில் விவசாயம், ஐடி, வருவாய் துறை என்று பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் செங்கோட்டையன் இருந்துள்ளார்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபர் கடந்த 2016 – 2021 காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் இருந்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த செங்கோட்டையன், ஜெயலலிதாவின் பயணத் திட்டங்களை வகுத்து வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் உள்கட்சி மோதல் வெடித்தது. எடப்பாடி எழுச்சி செங்கோட்டையன் வீழ்ச்சி ஓ பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தர்மயுத்தம் தொடங்கினார்.
அப்போது முதல்வர் பொறுப்புகளில் பரீசிலிக்கப்பட்டவர்களின் பெயர்களில் செங்கோட்டையன் பெயரும் அடிபட்டது. எனினும், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அதிமுகவில் செயல்பட்டார். எனினும், எடப்பாடி பழனிசாமி எழுச்சிக்கு பிறகு செங்கோட்டையன் செல்வாக்கு குறைந்தது. இருந்த போதிலும் இருவருக்கும் இடையே மோதல் வெளிப்படையாக வெடிக்காத நிலையில் அண்மையில், பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நானே அதற்கான பணிகளை தொடங்குவேன் என்றும் பேசியிருந்தார்.
இதையடுத்து, செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டது. அப்போதே அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என பேசப்பட்டது. ஆனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. இந்த நிலையில் தான்  பசும்பொன் தேவர் நிகழ்ச்சியில் டிடிவி, ஓ பிஎஸ்சுடன் சந்தித்திருந்ததை அடுத்து தற்போது  அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு மரணமடைந்த பிறகு  அதிமுகவில் தலைமைப் பொறுப்புகள் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு அதிமுக பலவேறு பகுதிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் அக்கட்சியில் பல மூத்த அரசியல்வாதிகள் வெளியேற்றப்படுவதும் அவ்வாறு வெளியேற்றப்படும் மூத்த நிர்வாகிகள் திமுகவில் இணைவது   திமுகவிற்கு மேலும் பலத்தையும் அதிமுகவிற்கு மேலும் பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 2026ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி தொடருமா? அதிமுகவின்  தோல்வி தொடருமா? அல்லது   தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *