Seeman: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

திமுக அரசின் தோல்வியே சென்னை வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து சீமான் கூறியிருப்பதாவது: இயற்கைச் சீற்றத்தை எவராலும் தடுக்க முடியாதென்றாலும், அம்மழையை எதிர்கொள்வதற்குரிய வடிகால் வாய்ப்புகளும், வாய்க்கால்களும், நீர்வழிப்பாதைகளும் ஒரு நகரத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும். அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை ஆண்டு வரும் இருபெரும் திராவிடக்கட்சிகளும் அதனை செய்யத் தவறி, மாநகரத்தையே வாழத் தகுதியற்ற நிலம் போல மாற்றியிருப்பது வெட்கக்கேடானது.

ஒவ்வொரு ஆண்டும் வடிகால் அமைப்பதற்கென சில பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, வெள்ளத்தில் மக்களைத் தத்தளிக்க விடுவது அப்பட்டமான முறைகேடாகும்.

2015ம் ஆண்டு அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மதிப்பிட முடியாத அளவுக்குப் பேரிழிவை எதிர்கொண்டும், இன்றுவரை அதிலிருந்து பாடம் கற்காதுவிட்டு மக்களை வெள்ளப் பாதிப்புக்குள்ளாக்கியது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியாகும்.

இனி எந்தக் காலத்திலும் சென்னை வெள்ளக்காடாக மாறாவண்ணம் தடுக்கும்விதத்தில் நகரக் கட்டுமானத்தையும், வடிகால் அமைப்பையும் உருவாக்க வேண்டுமெனவும், வடிகால் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏறக்குறைய 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படா வண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *