
சாத்தான்குளத்தில் 3 தலைமுறையாக மின்சாரம் இல்லாமல் அவதியுற்று வரும் அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் மேல சாத்தான்குளம் அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த காட்டு நாயக்கர் இன சமுதாயத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்த பகுதியில் 3 தலைமுறைக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 3 தலைமுறையாக கோலப்பொடி தயாரிப்பு பணியிலும், தசரா சடை முடி தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் கடந்த மூன்று தலைமுறையாக மின்சார வசதியின்றி மிகவும் தவித்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மின்சார வசதி இல்லாததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொசுக்கடி மற்றும் விஷ ஐந்துக்களின் கடியால் மிகவும் தவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் தங்களது செல்போனுக்கு 10 ரூபாய் கடையில் கொடுத்து சார்ஜ் செய்து அந்த ஒளியில் வீட்டுப்பாடம் படிப்பதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் பல்வேறு இன்னல்களால் தவித்து வரும் அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


