5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தடை ? விஜய் தரப்பு அதிரடி வாதம்..!

தமிழக அரசியல் களத்தில் மட்டுமல்லாமல், நீதிமன்றத்திலும் ஒரு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது 5 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் விவகாரம். திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு இதுவரை தெளிவான முடிவு கிடைக்காத நிலையில், இந்த விவகாரம் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ள கதையை நம் ஜெம் தொலைக்காட்சி மூலம் பார்க்கலாம்.

தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என்று பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாஜக பிரமுகர் வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இதற்கிடையே, தேர்தல் ஆணையமும் நீதிமன்றத்தில் முக்கியமான நிலைப்பாட்டை தெரிவித்திருந்தது. சம்பந்தப்பட்ட தொகுதிகளில் நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகள் முடிவடையும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்படாது என தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த சூழலில்தான் முதலமைச்சர் ஜோசப் விஜய் தரப்பு, இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வலியுறுத்தி வருகிறது.

முதலமைச்சர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், திருச்சி கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான காலவரிசை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விஜய்யின் திருச்சி கிழக்கு வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு ஜூன் 17ஆம் தேதிதான் தாக்கல் செய்யப்பட்டது என்றும், ஆனால் அதற்கு முன்பாகவே மே 10ஆம் தேதி அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்ட நாளில், சம்பந்தப்பட்ட தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கு நிலுவையில் இல்லை என்றும் விஜய் தரப்பு வாதிட்டுள்ளது.இதோடு நிற்கவில்லை. இந்த பொதுநல மனுவே விசாரணைக்கு உகந்ததா என்ற கேள்வியையும் விஜய் தரப்பு எழுப்பியுள்ளது. மனுவை தாக்கல் செய்துள்ள நபர் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் தேர்தல் வழக்கு தொடர்ந்தவர் அல்ல என்றும், அந்த தொகுதிகளின் வாக்காளரும் அல்ல என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளில் நீண்ட காலமாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையை ஏற்படுத்தி, இடைத்தேர்தலை காலவரையின்றி தாமதப்படுத்தும் நோக்கத்திலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், விஜய் தரப்பு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.முக்கியமாக, 5 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ பதவி காலியாக இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் விஜய் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், நீதிமன்றத் தடை காரணமாக இந்த செயல்முறை நீடிப்பது தொகுதி மக்களின் பிரதிநிதித்துவ உரிமையை பாதிக்கக்கூடும் என்பதே விஜய் தரப்பின் வாதத்தின் மையப்புள்ளியாக உள்ளது.ஆனால் மறுபுறம், மனுதாரர் தரப்பின் வாதமும் வேறுபட்டதாக இருக்கிறது. தேர்தல் வழக்குகள் ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அவை முடிவடையும் முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் சட்டரீதியான சிக்கல்கள் உருவாகலாம் என்பதே மனுதாரர் தரப்பின் நிலைப்பாடு.

மேலும், தேர்தல் வழக்குகள் முடியும் வரை இந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாது என்று தேர்தல் ஆணையமே நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதால், அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.அதாவது, ஒரு பக்கம் மக்கள் பிரதிநிதி இல்லாமல் தொகுதிகளை காலியாக வைத்திருப்பது பொதுநலனுக்கு எதிரானது என்ற வாதம். மறுபக்கம் தேர்தல் வழக்குகள் முடிவடையாமல் புதிய தேர்தல் நடத்தினால் சட்ட சிக்கல் உருவாகலாம் என்ற வாதம்.

இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கு இடையில்தான் தற்போது நீதிமன்றத்தில் முக்கியமான சட்டப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா உள்ளிட்டோரும் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

பெருந்துறை தொகுதியைப் பொறுத்தவரை, முன்னாள் எம்.எல்.ஏ ஜெயக்குமார் தரப்பும் முக்கியமான சட்ட வாதத்தை முன்வைத்துள்ளது. அவரது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுவிட்டதால், பெருந்துறை தொகுதிக்கான இடைத்தேர்தல் தடையையும் நீக்க வேண்டும் என்று அந்த தரப்பு வலியுறுத்தியுள்ளது. இதனால் 5 தொகுதிகளின் விவகாரத்திலும் ஒரே மாதிரியான நிலை இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

ஒருபுறம் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மறுபுறம், குறிப்பிட்ட தொகுதிகளில் தொடரப்பட்ட வழக்குகளில் சில முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பெருந்துறை தொடர்பான தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதிக்கான தடையைத் தொடர்வதன் சட்ட அடிப்படை குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற விசாரணையிலும் இந்த விவகாரம் மீண்டும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு குறித்தும் விஜய் தரப்பு கேள்வி எழுப்பியது. தேர்தல் ஆணையம் தன்னிச்சையாகவே தேர்தலை ஒத்திவைக்கிறதா அல்லது மனுதாரரின் கோரிக்கையின் அடிப்படையிலா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய விசாரணையிலும் விஜய் தரப்பில், தேர்தல் வழக்குகள் முடியும் வரை 5 தொகுதிகளையும் காலியாக வைத்திருப்பது பொதுநலனுக்கு எதிரானது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலாக, தேர்தல் வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் நடத்தும் திட்டமே இல்லை என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருப்பதால், தற்போதைய தடையை உறுதி செய்ய வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வலியுறுத்தியது.

இதனால் நீதிமன்றத்தில் முக்கியமான கேள்வி ஒன்று எழுந்துள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பது மட்டும் காரணமாக ஒரு தொகுதியின் இடைத்தேர்தலை காலவரையின்றி தள்ளிப்போட முடியுமா? அல்லது மக்கள் பிரதிநிதி இல்லாமல் தொகுதி நீண்ட காலம் இருப்பது பொதுநலனுக்கு ஏற்புடையதா?

இந்த இரு கேள்விகளுக்கான சட்டப்பூர்வ விளக்கமே இந்த வழக்கின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கக்கூடியதாக உள்ளது. முதலமைச்சர் விஜய் தரப்பின் வாதம் விசாரணையில் முழுமையாக நிறைவடையவில்லை.

ஆகவே திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? தற்போதைய தடை நீடிக்குமா? அல்லது தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்க நீதிமன்றம் அனுமதி அளிக்குமா? என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *