தனி மரம் தோப்பாகாது..!

வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாகி வரும் நிலையில், சசிகலா தனது புதிய அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சிறையில் இருந்து வெளி வந்தபின் பெரியளவில் அரசியலில் சசிகலா ஈடுபடவில்லை.. ஆனால் சட்டசபைத் தேர்தல் நெருங்கிய பின் திடீரென புதிய கட்சி, சின்னம் என்று தீவிரமாக செயல்பட தொடங்கி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. இந்தக் கட்சிக்கு கட்டமைப்பு இல்லையென்றாலும், தமிழ்நாடு முழுவதும் அதிமுகவில் இருக்கும் நிர்வாகிகள் பலரையும் சசிகலாவால் தவெக கூட்டணி பக்கம் கொண்டு வர முடியும் என்று கருதப்படுகிறது.இந்நிலையில் , நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்துள்ள இந்த முடிவு, தேர்தலில் இவங்க எந்த கட்சியோடு இணைந்து தேர்தலை சந்திக்க போகிறார் .. அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது ..இந்நிலையில் இதன் பின்னணி தகவல்கள் குறித்து பார்க்கலாம்…

அனங்காபுத்தூர் ராமலிங்கம் என்பவர் தொடங்கிய அதிமுகவில் எப்படி எம்ஜிஆர் இணைந்தாரோ, அதே பாணியை சசிகலாவும் பின்பற்றி இருக்கிறார். இதையடுத்து கட்சியின் பெயராக அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்று அறிவித்தார். இதன்பின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் க்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி கட்சியின் கொடியை அறிமுகம் செய்திருந்த அவர், தற்போது கட்சியின் பெயரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

முன்னதாக, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸை அவர் நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய முக்கியக் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், சசிகலாவின் இந்த புதிய அரசியல் கட்சி அறிவிப்பு வரும் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் பேசுகையில் ,  “திமுக என்ற தீய சக்தியை வேரறுத்து தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக புரட்சித் தலைவர் ஒரு இயக்கத்தை தொடங்கினார். அந்த கட்சியானது ஏழைகளுக்காகவே உருவாக்கப்பட்டது.மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை ஆட்சியில் அவர் செய்து காட்டினார். அவரைப் போலவே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும், எம்ஜிஆர் கொள்கையில் அடி பிறழாமல் மக்களுக்கு வேண்டிய நல்ல திட்டங்களையெல்லாம் கொடுத்தார். குறிப்பாக, அவருடைய ஆட்சி காலத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக நிறைய திட்டங்களை உருவாக்கினார். அவருடைய மறைவுக்கு பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

தமிழ்நாட்டு மக்களை திமுக என்ற தீய சக்தி கசக்கி பிழிந்து விட்டது. இதையெல்லாம் பார்த்து இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினேன். எம்ஜிஆர், ஜெயலலிதா மீது பற்றுள்ள ஒரு தொண்டர் ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளார்.

அவர் ஆரம்பித்த கட்சியில் நான் என்னை இணைத்துக் கொள்கிறேன். அந்த கட்சிக்கு ‘அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட உள்ளோம்” என்றார். பின்னர் கண் கலங்கியவாறே, மக்களோடு இருப்பேன் என்பதற்கு இந்த சின்னமே ஒரு சாட்சி என்று கூறினார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் அபுமமுக கட்சி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்னந்தோப்பு சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று கூறிய சசிகலாவிடம், தனித்து போட்டியிடுவீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, “தனி மரம் தோப்பாகாது என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் நாங்கள் தனி மரமாக வரவில்லை. தோப்பாக தான் வந்துள்ளோம். தலைவர் காலத்திலிருந்தே எங்களுடன் வந்தவர்களுக்கு பாதுகாப்பாக நாங்கள் இருப்போம்” என்று பதிலளித்தார்.

அமமுக என கட்சி தொடங்கிய டி.டி.வி. தினகரன் இப்போது அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பது குறித்து கேட்டதற்கு, “ஒரு கட்சி அதன் விருப்பத்திற்கேற்ப செயல்படும். என்னை பொருத்தவரை எல்லாமே மக்கள் தான். தமிழக மக்கள் நல்ல மனம் படைத்தவர்கள். அதனால் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.

மேலும் , தனது கட்சியான அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடாது, கூட்டணியுடன் இணைந்தே களம் இறங்கும் என்று சசிகலா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பல்வேறு அரசியல் கணக்குகளை உருவாக்கியுள்ளது.தேர்தலில் தனது கட்சிக்கு ‘தென்னந்தோப்பு’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சசிகலா உறுதிப்படுத்தியுள்ளார். இந்தச் சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியலில் தற்போது பேசுபொருளாக இருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு சசிகலா நேரடியாக பதிலளிக்காமல், கொள்கை மற்றும் கருத்து ரீதியாக ஒத்த கட்சிகளுடன் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த பதில் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

ஏற்கனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட போது செங்கோட்டையனுக்காக சசிகலா பேசி இருந்தார். இதனால் செங்கோட்டையன் மூலமாக தவெக உடனான கூட்டணியில் சசிகலா தரப்பு இணையும் என்று கருதப்படுகிறது.

சசிகலாவின் இந்த அரசியல் அறிவிப்பு மற்றும் கூட்டணி குறித்த திறந்த நிலைப்பாடு, வரவிருக்கும் தேர்தலில் ஓட்டு வங்கியில் எந்தளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் தமிழக அரசியல் சூழலில் புதிய கூட்டணி அமைப்புகள் உருவாகுமா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *