காமராஜ் படத்தை நாட்டுடைமையாக்குங்கள் – முதல்வரிடம் கோரிக்கை!

Advertisements

காமராஜ் திரைப்படத்தை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று இயக்குநரும் தயாரிப்பாளருமான பாலகிருஷ்ணன் தமிழ்நாடு முதலமைச்சர்  ஜோசப் விஜய்க்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இயக்குநர் பாலகிருஷ்ணன் பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றைக் காமராஜ் என்னும் பெயரில் திரைப்படமாகத் தயாரித்து 2004ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இந்நிலையில் இயக்குநரும் தயாரிப்பாளருமான பாலகிருஷ்ணன், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், காமராஜ் திரைப்படத்தைத் தயாரிக்கப் பல்வேறு ஆட்களிடமும் நிறுவனங்களிடமும் நிதியுதவி பெற்றதாகவும், வங்கிக் கடன் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். காமராஜ் திரைப்படத்துக்குப் பின் வெல்கம் பேக் காந்தி, திருக்குறள் ஆகிய படங்களைத் தயாரித்தாலும், காமராஜ் திரைப்படத்தால் அடைந்த கடனைத் திரும்பிச் செலுத்த உதவவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் மிகுந்த மனச்சுமையுடன் கடன் வழங்கியோரை எதிர்கொள்ளும் துணிவின்றி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காந்தி திரைப்படத்துக்கு மத்திய அரசு உதவியதையும், அம்பேத்கர் திரைப்படத்துக்கு மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் 18 கோடி ரூபாய் வழங்கி உதவியதையும், பெரியார் படத்துக்குத் தமிழக அரசு நிதியுதவி செய்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரை வழிகாட்டியாகக் கொண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், நாட்டின் நலனுக்காகவே தயாரிக்கப்பட்ட காமராஜ் திரைப்படத்தை நாட்டுடைமையாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு ஈவுத்தொகையாக 2 கோடி ரூபாய் வழங்கும்படியும் வேண்டியுள்ளார்.

அவ்வாறு செய்தால் காமராஜ் திரைப்படத்தைத் தயாரிக்க வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தி மனநிறைவு அடைய இயலும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *