
காவல்துறைப் பணியில் சேர இலட்சக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் வேளையில் ஓராண்டு முழுவதும் காவலர் தேர்வு நடத்தப்படாது என்று அறிவித்துள்ளது பெரும் அநீதியாகும் எனப் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி காவலர் தேர்வு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காவல்துறைப் பணியில் சேர லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் வேளையில் ஓராண்டு முழுவதும் காவலர் தேர்வு நடத்தப்படாது என்று அறிவிப்பது பெரும் அநீதியாகும் என்று தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பரிந்துரைப்படி, ஒரு இலட்சம் மக்களுக்கு 222 காவலர்கள் இருக்க வேண்டும் என்றும் அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் காவலர் பணியிடங்கள் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 600 ஆக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், தமிழ்நாட்டில் 60 ஆயிரம் காவலர் பணியிடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான காவலர் நியமன ஆள்தேர்வு அறிவிக்கையை செப்டம்பர் மாதத்தில் வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். காவலர் பணிக்கான வயது வரம்பைப் பொதுப் பிரிவினருக்கு 30, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32, பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு 35 ஆகத் தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.





